வெனிசுலா அதிபர் சிறையில்.. பில்லியன் டாலர் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு ஆட்டைய போட்ட டிரம்ப்..

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க சிறப்புப் படைகள் அதிரடியாகக் கைது செய்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் அபரிமிதமான எண்ணெய் வளத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. வெனிசுலாவிடமிருந்து சுமார் 5 கோடி பீப்பாய் (50 Million Barrels) கச்சா எண்ணெயை அமெரிக்கா பெற்றுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

டிரம்ப்பின் ‘மாஸ்டர் பிளான்’:
தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் பேசிய பின் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“வெனிசுலாவின் இடைக்கால நிர்வாகம் சுமார் 3 முதல் 5 கோடி பீப்பாய் உயர்தர கச்சா எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது 4.2 பில்லியன் டாலர் (சுமார் ₹35,000 கோடி) ஆகும். இந்த எண்ணெய் ஏற்கனவே சேமிப்புக் கப்பல்கள் மூலம் ஏற்றப்பட்டு, அமெரிக்கத் துறைமுகங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது,” என டிரம்ப் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

நானே வெனிசுலா அதிபர்- வைரலாகும் போஸ்ட்:
இந்த அறிவிப்போடு நிறுத்திவிடாமல், டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தன்னையே ‘வெனிசுலாவின் தற்காலிக அதிபர்’ (Acting President of Venezuela) என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளார். வெனிசுலாவில் ஒரு நிலையான ஆட்சி அமையும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை வழிநடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணம் யாருக்கு?
இந்த எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவே தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். “இந்த நிதி வெனிசுலா மக்களின் நலனுக்காகவும், அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஈரானுக்கோ அல்லது பயங்கரவாத அமைப்புகளுக்கோ இனி ஒரு பைசா கூட போகாது” என்று டிரம்ப் உறுதிப்படக் கூறியுள்ளார்.

உலகச் சந்தையில் தாக்கம்:
டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 1.5% முதல் 2% வரை சரிந்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் என்பதால் உலக அரசியலில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Leave a Comment