அமெரிக்காவுக்கே முன்னுரிமை (America First) என்ற தனது கொள்கையைத் தீவிரப்படுத்தும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு அதிரடி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஐநா-வின் முக்கிய அங்கங்கள் மற்றும் இந்தியா-பிரான்ஸ் முயற்சியால் தொடங்கப்பட்ட சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஒரே கையெழுத்தில் 66 அமைப்புகள் காலி!
அமெரிக்காவின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகள் அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐநா அமைப்புகள்:
காலநிலை மாற்றம் குறித்த ஐநா-வின் உடன்படிக்கை (UNFCCC), ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD), மற்றும் அறிவியல் ரீதியாகக் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும் IPCC உள்ளிட்ட 31 ஐநா அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.
இந்தியாவிற்குப் பின்னடைவு:
ஹரியானாவின் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்டு, பிரதமர் மோடியின் முயற்சியால் தொடங்கப்பட்ட சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் (ISA) இருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது. இது இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA), சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) உள்ளிட்ட 35 இதர சர்வதேச அமைப்புகளையும் அமெரிக்கா கைவிட்டுள்ளது.
வெளியேற்றத்திற்கான காரணம் என்ன?
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இது குறித்துக் கூறுகையில், “இந்த அமைப்புகள் பயனற்றவை, ஊழல் நிறைந்தவை மற்றும் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பவை. உலகளாவிய அதிகார வர்க்கத்திற்கு (Globalist Bureaucrats) அமெரிக்க மக்களின் பணத்தைச் மானியமாக வழங்குவதை நாங்கள் நிறுத்தப்போகிறோம்,” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஐநா கவலை:
காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா விலகுவது, எதிர்காலத் திட்டங்களைப் பாதிக்கும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்கா வெளியேறுவதால், இந்த 66 அமைப்புகளும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்கக்கூடும்.
இந்தியா-அமெரிக்கா உறவு:
பாதுகாப்புத் துறையில் நெருக்கம் காட்டினாலும், வர்த்தகம் மற்றும் எரிசக்தி விவகாரங்களில் டிரம்ப்பின் இந்த முடிவுகள் இந்தியாவுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.