“இனி நான் போற பாதை சிங்கப் பாதை” என்கிற பாணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்தே தீருவேன் என அவர் அடம் பிடிப்பது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.
ரஷ்யா, சீனாவிடம் கொடுக்க முடியாது!
வெள்ளை மாளிகையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தனது பிடிவாதத்திற்கான காரணத்தை விளக்கினார்.
“அவர்கள் (டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்து விவகாரத்தில் நாங்கள் ஏதேனும் செய்தே தீருவோம். ஏனென்றால், நாங்கள் அதைச் செய்யாவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும். ரஷ்யாவையோ, சீனாவையோ எங்கள் பக்கத்து வீட்டுக்காரராக மாற்ற நாங்கள் விரும்பவில்லை.”
சொந்தமாக்குவது மட்டுமே தீர்வு!
தற்போது கிரீன்லாந்தில் அமெரிக்காவுக்கு ராணுவ தளம் (Pituffik Space Base) இருந்தாலும், அது வெறும் ‘குத்தகை’ (Lease) அடிப்படையில் மட்டுமே உள்ளது. இது குறித்துப் பேசிய ட்ரம்ப், “குத்தகையை யாராலும் பாதுகாக்க முடியாது, உரிமையை (Ownership) மட்டுமே பாதுகாக்க முடியும். ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை விட, ஒரு நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதுதான் உண்மையான பாதுகாப்பு,” எனத் தெரிவித்தார்.
டென்மார்க் கடும் எதிர்ப்பு:
ட்ரம்ப்பின் இந்த அதிரடிப் பேச்சுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல, ஒரு நேட்டோ நட்பு நாட்டின் மீதே ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவது நேட்டோ கூட்டணியின் முடிவுக்கு வழிவகுக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். “நாங்கள் இதைச் சுமுகமான முறையில் (Nice way) செய்ய விரும்புகிறோம், அது முடியாவிட்டால் கடினமான முறையில் (Hard way) செய்வோம். உங்களுக்கு வேறு வழியே இல்லை,” என அவர் விடுத்த எச்சரிக்கை சர்வதேச அளவில் ‘ஆக்கிரமிப்பு அரசியல்’ குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
கிரீன்லாந்து இயற்கை எரிவாயு, நிலக்கரி, இரும்புத் தாது மற்றும் அரிய வகை கனிமங்கள் நிறைந்த பகுதி. புவி வெப்பமயமாதலால் ஆர்க்டிக் பனிக்கட்டிகள் உருகி வரும் நிலையில், புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் கைப்பற்றவும், ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் அமெரிக்கா இந்தத் திட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
வெனிசுலாவில் சமீபத்தில் நடந்த ராணுவ அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் அடுத்த குறி ‘கிரீன்லாந்து’ தான் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.