போகிற உசுரு கட்சி வாசல்லயே போகட்டும்.. தவெக அலுவலகம் முன்பு அஜிதா தர்ணா.. விஜய் காரை மறித்ததால் பனையூரில் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சிப் பூசல் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் நியமன விவகாரம், இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தின் முன் ஒரு தர்ணா போராட்டமாக வெடித்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி அஜிதா, தனக்குப் பதவி மறுக்கப்பட்டதை எதிர்த்துச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

விஜய் காரை மறித்த அஜிதா:
இன்று காலை 10 மணி முதல் பனையூர் அலுவலகம் முன்பு அஜிதா தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். அப்போது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த கட்சியின் தலைவர் விஜய்யின் காரை அவர் திடீரென வழிமறித்தார். தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் காரை நிறுத்தி முறையிட முயன்றார். இருப்பினும், விஜய்யின் கார் அவரைத் தாண்டிச் சென்றது.

சாலையில் அமர்ந்து தர்ணா:
தலைவர் தன்னைச் சந்திக்காமல் சென்றதால் கடும் அதிர்ச்சியடைந்த அஜிதா, அலுவலகம் முன்பு உள்ள மெயின் ரோட்டிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
“சுமார் 25 முதல் 30 ஆண்டுகளாகத் தளபதிக்காகவே உழைத்திருக்கிறோம். உழைத்தவர்களுக்குப் பொறுப்பு தராமல் எங்களைப் புறக்கணிக்கிறார்கள். பொறுப்பு தராமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம். போகிற உயிர் இந்தக் கட்சி வாசலிலேயே போகட்டும்,” என ஆவேசமாக முழக்கமிட்டார்.

நிர்மல் குமார் நடத்திய பேச்சுவார்த்தை:
நிலைமை கைமீறிச் சென்றதைக் கண்ட தவெக தலைமை, கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமாரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது. அவர் அஜிதாவிடம் நீண்ட நேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், கட்சி அலுவலகத்திற்குள் செல்ல அஜிதா அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவருக்கும் அலுவலகப் பாதுகாப்புக் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எழும் விமர்சனங்கள்:
கடந்த வாரம் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய்,
“மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் ஓடி வந்து நிற்பான்,” என்று பேசியிருந்தார். ஆனால், தற்போது அவரது சொந்தக் கட்சி நிர்வாகி, பல மணி நேரமாக அலுவலகம் முன்பு காத்திருந்தும், அவரது காரை மறித்துக் கண்ணீர் வடித்தும், காரை நிறுத்தாமல் சென்றது ஏன்? என்று அரசியல் அரங்கில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

திருச்சி, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே நிர்வாகிகள் நியமனத்தில் ஊழல் புகார்கள் மற்றும் அதிருப்திகள் நிலவி வரும் சூழலில், அஜிதாவின் இந்தப் போராட்டம் தவெக தலைமைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment