பாழுங்கிணற்றில் தள்ளினாலும் அரசனாக வருவேன்.. பைபிள் கதையைச் சொல்லி விஜய் கொடுத்த ‘பகீர்’ பதிலடி!

”எவ்வளவு பெரிய எதிரிகள் இருந்தாலும், மக்களின் அன்பும் உழைப்பும் இருந்தால் அவர்களை ஜெயிக்கலாம்” எனத் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கிறிஸ்துமஸ் விழாவில் பைபிள் கதையைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட விஜய், தமிழகத்தின் பண்பாடு மற்றும் பைபிள் கதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

மாறாத அன்பு:
விழாவில் பேசிய விஜய், “தமிழ்நாட்டு மண் தாய் அன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதான். அதேபோலத்தான் பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளையும் நாம் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். இதுதான் நம் ஊரின் சிறப்பு. கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும், அந்த ஒளி நம்மை வழிநடத்தும்,” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

யாருக்கு எச்சரிக்கை?:
தொடர்ந்து பைபிளில் உள்ள ஒரு கதையைக் குறிப்பிட்ட அவர், “பைபிளில் ஒரு இளைஞருக்கு எதிராக அவரது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு அவரைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிடுவார்கள். ஆனால் அந்த இளைஞர் மீண்டும் வந்து அந்த நாட்டுக்கே அரசனாகி, தனக்குத் துரோகம் செய்தவர்களையும் சேர்த்து அந்த நாட்டையே காப்பாற்றுவார். இக்கதைகள் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்; கடவுளின் அருளும், மக்களை நேசிக்கும் அன்பும், அதீத உழைப்பும் இருந்தால் எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம்,” என்றார்.

வெற்றி நிச்சயம்!
தனது உரையின் இறுதியில், “அனைத்து புகழும் இறைவனுக்கே, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” எனக் கூறி தனது அரசியல் இலக்கை உறுதிப்படுத்தினார். விஜய்யின் இந்த ‘கிணற்று கதை’ அரசியல் ரீதியாகத் தனக்குத் துரோகம் இழைப்பவர்களுக்கும், முட்டுக்கட்டை போடுபவர்களுக்கும் விடுக்கப்பட்ட சவுக்கடி என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment