வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் தவெக-வுக்கு வாக்குக் கேட்கிறார்கள்!.. களத்தில் தெரியும் விஜய் அலை!.. தெறிக்கவிட்ட செங்கோட்டையன்!..

”தமிழகத்தில் நடத்தப்பட்ட ரகசிய சர்வேயில் பிரதமர் மோடியை விடத் தலைவர் விஜய் செல்வாக்கில் முதலிடத்தில் உள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குப் பிறகு ஒரு நல்லவர் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற மக்களின் ஏக்கத்தைத் தமிழக வெற்றி கழகம் தீர்க்கும்,” என அக்கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சர்வேயில் முதலிடம்:
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது,”தமிழகத்தில் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்ற ஆய்வு (Survey) ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், மக்களின் செல்வாக்கில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கே அந்தப் பட்டியலில் இரண்டாவது இடம்தான் கிடைத்துள்ளது. இதிலிருந்தே தமிழக மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.”

புதிய வரலாறு – 2026 இலக்கு:
“தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் இயக்கமாக அமையும். ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம். ஆனால், களத்தில் மக்கள் அலை ஆர்ப்பரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களும் பெண்களும் காட்டும் வரவேற்பு, விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என்பதை இப்போதே உறுதி செய்துவிட்டது. எம்ஜிஆர் எப்படித் தமிழக மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்து ஆட்சிக்கு வந்தாரோ, அதேபோல விஜய் நாளை ஆட்சியைப் பிடிப்பார்.”

புதிய முகம் வேண்டும்:
தொடர்ந்து பேசிய அவர், “திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் வேண்டாம், ஒரு புதிய முகம் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். இன்று ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம், ‘இந்த முறை தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களியுங்கள்’ என்று மழலை மாறாமல் கூறுகின்றனர். ஒரு நல்லவர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நிலை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்குப் பிறகு இப்போதுதான் உருவாகியுள்ளது.”

விமர்சனங்களுக்குப் பதிலடி:
“தவெக-வின் வளர்ச்சியைப் பார்த்துப் பயந்து பலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதற்குப் பதில் அளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்பதற்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் காலம் பதில் சொல்லும். அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்பதை யாராலும் தடுக்க முடியாது,” எனச் செங்கோட்டையன் மிக உறுதியாகத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து செங்கோட்டையன் வெளியிட்டுள்ள இந்த ‘சர்வே’ குறித்த தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment