நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான அனுமதி, பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கைப் பேணும் பொருட்டு, தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதன் காரணமாக, மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை ஈர்க்கக்கூடிய நடிகர் விஜய்யின் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவது பாதுகாப்பிற்கு சவாலாக இருக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் விஜய்யின் கடந்த கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலையும், ஒரு சமூக ஆர்வலர் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அளித்த மனுவையும் காவல்துறை கருத்தில் கொண்டுள்ளது.
எனவே, டிசம்பர் 5-ஆம் தேதிக்கு பதிலாக வேறு தேதியில் மக்கள் சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யுமாறு தமிழக வெற்றிக் கழகத்திடம் புதுச்சேரி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ரோடுஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 2 நாட்களில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடு செய்வதில் சிக்கல் உள்ளது.
எனவே புதுவையில் 5-ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்ட விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வேறொரு நாளில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க. தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.