உலக அரசியலில் எப்போதும் அதிரடி காட்டும் டொனால்ட் டிரம்ப், இப்போது வெனிசுலாவுடன் கை கோர்த்து புதிய ‘எண்ணெய் அரசியல்’ அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார். வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodriguez) டிரம்ப் நடத்திய நீண்ட தொலைபேசி உரையாடல், உலக நாடுகளின் கவனிப்பைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
என்ன பேசினார்கள்?
வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்ற டெல்சி ரோட்ரிக்ஸுடன் டிரம்ப் நேரடியாகப் பேசியுள்ளார். இது குறித்து டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
“வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சியுடன் மிகச்சிறந்த, கண்ணியமான உரையாடல் நடந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும்.”
எண்ணெய் & கனிம வளம்:
முக்கியமாக கச்சா எண்ணெய், கனிம வளங்கள் மற்றும் வர்த்தகம் குறித்து விரிவாகப் பேசினோம். வெனிசுலாவை மீண்டும் வளமான நாடாக மாற்ற அமெரிக்கா உதவும்.
அமெரிக்காவுக்கு லாபம்:
ஏற்கனவே வெனிசுலாவிலிருந்து 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு வரத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க டிரம்ப் மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.
பகை மறந்து நட்பு பாராட்டுவோம்!
கடந்த காலங்களில் வெனிசுலா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த அமெரிக்கா, இப்போது அந்த நாட்டுடன் சுமுகமான உறவை விரும்புவது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “வெனிசுலா விரைவில் மீண்டும் ஒரு செழிப்பான நாடாக மாறும்” என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் ஷாக்!
வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளம் மற்றும் கனிம வளங்கள் மீது சீனா மற்றும் ரஷ்யாவின் பார்வை இருந்து வந்த நிலையில், டிரம்ப் முந்திக்கொண்டு டெல்சியுடன் ‘டீல்’ பேசியிருப்பது உலக அரசியலில் ஒரு பெரிய ‘செக்’ ஆகப் பார்க்கப்படுகிறது.