தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) மற்றும் திமுக-விசிக கூட்டணிக்கு இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டுள்ள விவகாரத்தில் விஜய்யின் மௌனத்தைக் கலைக்கும் வகையில், விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஆளூர் ஷாநவாஸின் ‘நச்’ கேள்விகள்:
தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடி ஷாநவாஸ் பதிவிட்டுள்ளதாவது,
“விஜய் கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார், இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார். ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலையோ, திருப்பரங்குன்றம் தர்கா விவகாரத்தையோ கண்டிக்க மாட்டார். இது வெறும் சடங்கு அரசியலா?காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க விரும்புவார். ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டபோது ஏன் வாய்திறக்கவில்லை?”
பாஜகவை எதிர்க்க அச்சமா?:
“கரூரில் மாநில அரசு இவரைத் தொடாதபோதும் ‘ஏ திமுக அரசே’ எனப் பொங்குபவர், இன்று சென்சார் போர்டு மூலம் ‘ஜனநாயகன்’ படத்திற்குச் சிக்கல் வந்தபோது ‘ஏ பாஜக அரசே’ எனப் பொங்காதது ஏன்?” என ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் களத்தில் ‘பொங்கலோ பொங்கல்’:
விஜய்யின் மௌனத்தைக் கிண்டல் செய்துள்ள அவர், தனது பதிவின் இறுதியில் “பொங்கலோ பொங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, விஜய் பொங்க வேண்டிய இடத்தில் பொங்காமல், பாதுகாப்பான இடங்களில் மட்டும் அரசியல் பேசுவதாக ஷாநவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திரைத்துறையும் அரசியலும்:
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தடையின் பின்னணியில் பாஜக இருப்பதாக நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், தவெக தரப்பில் இருந்து இதுவரை மத்திய அரசை நோக்கி எந்தவொரு நேரடி விமர்சனமும் முன்வைக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆளூர் ஷாநவாஸின் பதிவு தவெக ரசிகர்களிடையே கொந்தளிப்பையும், விசிக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.