ஒரு பைசா தொட மாட்டேன்.. சத்தியமா ஊழல் செய்ய மாட்டேன்!.. மேடையில் கர்ஜித்த விஜய்!

“அரசியலுக்கு வந்த பிறகு மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் நான் ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன்,” எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியாகச் சபதமேற்றுள்ளார்.

மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஊழல் மற்றும் நேர்மையான அரசியல் குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எனக்கு எதுக்கு அந்தப் பணம்?
மேடையில் மிக உணர்ச்சிகரமாகப் பேசிய விஜய், பழைய அரசியல்வாதிகளின் பாணியைத் தான் ஒருபோதும் பின்பற்ற மாட்டேன் என்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் கூறியதாவது,

“அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் சரி, அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறமும் சரி.. இதுக்கு முன்னாடி வந்தவங்க மாதிரியும், இப்ப இருக்கிறவங்க மாதிரியும் இந்த விஜய் ஊழல் செய்யவே மாட்டான். ஒரு பைசாவைக் கூட நான் தொட மாட்டேன்; எனக்கு அது அவசியமும் இல்லை. என் மீது ஒரு துளி ஊழல் கரை கூட படியவே படியாது,” என ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

மக்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள்:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் மறைமுகமாகச் சாடிய அவர், “தமிழக மக்கள் மாற்றி மாற்றி வாக்களித்து ஏமாந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். அந்த அழுத்தத்தைப் போக்கவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இந்த மாதிரி மிரட்டல்களுக்கெல்லாம் பயந்து அடங்கிப்போகிற ஆள் நான் இல்லை,” என்றும் குறிப்பிட்டார்.

2026-ல் ‘கிளீன்’ அரசியல்?
நடிகராக இருந்த காலத்திலேயே அதிக வருமானம் ஈட்டியவர் என்பதால், பணத்திற்காக அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை அவரது தொண்டர்கள் முன்வைக்கும் முக்கிய வாதமாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், “ஒரு பைசா கூட தேவையில்லை” என அவர் கூறியிருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், “ஊழலை விசில் ஊதி விரட்டுவோம்” என்கிற தொனியில் விஜய்யின் இந்தப் பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment