தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மேற்கொண்டு வரும் ஆன்மீக பயணங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. பொதுவாக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாகவே கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்குச் சென்று வருவது வழக்கம். ஆனால், விஜய் தேர்தலுக்கு முன்பாக இத்தகைய பயணங்களை தவிர்த்துவிட்டு, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் திருச்செந்தூர் மற்றும் வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு செல்வது, இது அரசியலுக்காக செய்யப்பட்ட செயல் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஓட்டுக்காக இந்த ஆன்மீக பயணங்களை அவர் மேற்கொண்டிருந்தால், தேர்தலுக்கு முன்னரே இதனை செய்து மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றிருப்பார் என்பது அவர்களின் வாதம். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் திருச்செந்தூர் சென்று ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்திருந்தால், அது எதிரிகளை வீழ்த்துவதற்காக செய்யப்பட்ட ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்பட்டிருக்கும். அப்படிச் செய்திருந்தால், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவரை உடனடியாக பாஜகவின் “பி டீம்” என்றும், இந்துத்துவா சக்திகளின் ஊதுகுழல் என்றும் விமர்சிக்க ஒரு நல்வாய்ப்பாக அது அமைந்திருக்கும்.
அரசியல் ரீதியாக பல விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால், மிகவும் திட்டமிட்டு தேர்தலுக்கு பின்னரே தனது நேர்த்திக்கடனை செலுத்த விஜய் முடிவெடுத்துள்ளார். இது அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுவதோடு, மதங்களை அரசியலோடு கலக்க அவர் விரும்பவில்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள், “ஜோசப் விஜய்” என்று தாங்கள் அன்போடு அழைக்கும் தலைவர் தேர்தலுக்கு முன்பாகக் கையில் வேல் ஏந்தி நின்றால், ஒருவேளை அவர் ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு மட்டும் ஆதரவானவராக மாறிவிட்டாரோ என்று வருத்தப்படும் சூழல் உருவாகியிருக்கக்கூடும். இத்தகைய குழப்பமான மனநிலை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படக்கூடாது என்பதில் விஜய் மிகத் தெளிவாக இருந்துள்ளார்.
இதனாலேயே, ஆதரவு மற்றும் விமர்சனம் ஆகிய இரண்டுக்கும் இடம் கொடுக்காத வகையில், தேர்தல் களம் அமைதியான பிறகு தனது வழக்கமான பிரார்த்தனைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இது ஓட்டுக்காக செய்யப்பட்ட நாடகம் அல்ல, அவரது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பது இதன் மூலம் புலனாகிறது.
விஜய்யின் இந்த ஆன்மீக பயணங்கள் குறித்து பல்வேறு ஹேசியங்கள் பேசப்பட்டாலும், இது ஒரு நேர்த்திக்கடன் அல்லது நலம் விரும்பிகள் சொல்லிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வேண்டுதல் என்றே பார்க்கப்பட வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக ஒரு செயலை செய்பவர், அதன் விளைவு உடனடியாக தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார். ஆனால், விஜய் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் அமைதியாக தனது ஆன்மீக தேடலில் ஈடுபட்டுள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் தேடுவது அர்த்தமற்றது என்றும், இது ஒரு தனிமனிதனின் வழிபாட்டு உரிமை என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முடிவாக, தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலுக்கு பிந்தைய ஆன்மீக பயணங்கள் என்பது ஒரு புதிய கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக தலைவர்கள் ரிசார்ட்டுகளில் தங்குவதும், கோடை வாசஸ்தலம் அல்லது வெளிநாடு செல்வதும், அடுத்தகட்ட காய்களை நகர்த்துவதுமாக இருக்கும் சூழலில், விஜய் அமைதியாக பிரார்த்தனைகளில் ஈடுபடுவது அவரது தொண்டர்களுக்கு ஒருவித நம்பிக்கையை அளித்துள்ளது.