மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றிருக்கும் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணிக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.90 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியிருக்கிறது.
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நிர்வாக ஊழியர்கள் என மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்யா அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், `1983 கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. அதேபோன்றதொரு வரலாற்றை நமது மகளிர் அணி இப்போது படைத்திருக்கிறது’ என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பரிசுத் தொகை தவிர உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் பரிசுத் தொகையாக ரூ.39.78 கோடி கிடைக்கும். மொத்தமாகப் பார்த்தால் கடந்த முறை நியூஸிலாந்தில் நடந்த உலகக் கோப்பையை விட மூன்று மடங்கு பரிசுத் தொகை (ரூ.123 கோடி) மொத்தமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.