கோதாவரி அந்த டிவி DTH எடுத்து வை!.. கிரிக்கெட் டெலிகாஸ்டில் இருந்து வெளியேறிய ஜியோ ஹாட்ஸ்டார்.. அதிர்ச்சி முடிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முக்கிய தொடர்களை ஒளிபரப்பும் உரிமையிலிருந்து விலக விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐசிசி-யிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஒளிபரப்பு உலகில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.25,760 கோடி இழப்பு:

ஐசிசி கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்புவதில் பெரும் தொகையை முதலீடு செய்த ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு, கடந்த 2024-2025 நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.25,760 கோடி அளவுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான நிதி இழப்பே, ஐசிசி தொடர்களின் ஒளிபரப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முக்கிய முடிவை எடுக்கக் காரணம் என்று ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒளிபரப்பு உரிமைகளுக்காக அதிகப் பணம் செலவழிக்கப்பட்ட போதிலும், சந்தாதாரர்கள் சேர்க்கை மற்றும் விளம்பர வருவாய் எதிர்பார்த்தபடி கிடைக்காததே இந்த மாபெரும் இழப்புக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் உலகில் சலசலப்பு:

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஹாட்ஸ்டார், இந்த முடிவை எடுத்திருப்பது விளையாட்டுத் துறை முதலீட்டாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாட்ஸ்டார் விலகியதைத் தொடர்ந்து, ஐசிசி தொடர்களின் ஒளிபரப்பு உரிமையை இனி எந்த நிறுவனம் கைப்பற்றும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment