தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. திமுக கூட்டணி கிட்டத்தட்ட கூட்டணி பணிகளை முடித்துவிட்டு தொகுதி உடன்பாடு பணியையும் விறுவிறுப்பாக கவனித்து வருகிறது. அதிமுக பக்கமும் கிட்டத்தட்ட கூட்டணி முடிவடைந்துவிட்ட நிலையில் அந்த கூட்டணியிலும் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்த தவெக ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் தனித்தே போட்டியிடுவது என்ற முடிவில் உள்ளது. இருப்பினும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், விஜய் தனக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 80 சீட்டுகள் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து “விஜய் இல்லாமலே நம்ம கூட்டணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்” என்று டெல்லி மேலிடத்திடம் கறாராக கூறிவிட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை என்பது சினிமாவில் வேண்டுமானால் ஒரு நட்சத்திர அந்தஸ்தை தரலாம், ஆனால் தேர்தல் களத்தில் அது எவ்வளவு எடுபடும் என்பது கேள்விக்குறியே. இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத ஒரு கட்சிக்கு, பல ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட அதிமுக ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, “விஜய் இல்லாமலேயே நம்மால் திமுகவை வீழ்த்த முடியும்” என்ற தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, பாஜக, பாமக மற்றும் அமமுக போன்ற கட்சிகளுடன் இணைந்து ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ள நிலையில், புதியதாக வரும் ஒருவருக்கு அதிக இடங்களை விட்டு கொடுப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர் கருதுகிறார்.
டெல்லி மேலிடத்திலிருந்து விஜய்யை சேர்த்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. “ஒரு செடியை நட்டு அது மரமாகி பழம் தருவதற்கு சில காலம் ஆகும், அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்” என்று விஜய்யை மறைமுகமாக சாடிய அவர், அரசியலில் திடீர் வெற்றிகள் என்பது சாத்தியம் இல்லாதது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். விஜய்க்கு 80 சீட்டுகள் வழங்கினால், அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என்றும், ஒருவேளை வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி கேட்பார் என்பதும் எடப்பாடியின் கவலையாக உள்ளது. எனவே, ஆரம்பத்திலேயே கறாராக இருப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்த அவர் விரும்புகிறார்.
விஜய்யின் வொர்த் என்ன என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரியும் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பகிரங்கமாகவே விமர்சிக்க தொடங்கியுள்ளனர். “களத்தில் இறங்கி வேலை செய்யாமல், வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பி வருபவர்களுக்கு 80 தொகுதிகளை வாரி வழங்குவது நியாயமல்ல” என்பதே இவர்களின் வாதம். விஜய்யின் கட்சிக்கு இன்னும் பூத் ஏஜண்ட்களோ அல்லது வலுவான கிளை கட்டமைப்போ இல்லை என்பதால், அவர்களை சேர்த்துக்கொண்டு பெரிய ஆளாக்குவதை விட, தனித்து போட்டியிட்டு அவர்களது பலத்தை நிரூபிக்க விடுவதே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார். இது மற்ற கூட்டணி கட்சிகளிடையே ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் ஆட்சிக்கு எதிரான அலை தமிழகத்தில் வீசுவதாகவும், அந்த வாக்குகளை அறுவடை செய்ய அதிமுகவின் பலமே போதுமானது என்றும் எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். 2026 தேர்தலில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்பதையும், தவெக போன்ற புதிய கட்சிகள் வெறும் வாக்குகளை பிரிக்கும் சக்திகளாகவே இருக்கும் என்பதையும் அவர் டெல்லிக்கு தெளிவாக உணர்த்தியுள்ளார். எடப்பாடியின் இந்த நேர்மையான கணிப்பு, டெல்லி தலைமையை சற்று யோசிக்க வைத்துள்ளது. இதன் மூலம் அதிமுகவின் சுயமரியாதையை அவர் நிலைநாட்டியுள்ளதாக தொண்டர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
மொத்தத்த்ஹில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது விஜய்க்கு ஒரு அக்னி பரீட்சையாக அமைய போகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி முடிவால், விஜய் தற்போது தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 234 தொகுதிகளிலும் ‘234 விஜய்கள்’ போட்டியிடுவதாக அவர் அறிவித்திருந்தாலும், அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியை அவரால் அசைக்க முடியுமா என்பது சந்தேகமே. எடப்பாடி பழனிசாமியின் இந்த துணிச்சலான நகர்வு, திமுகவை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்க உதவுமா அல்லது வாக்குகளை சிதறடித்து திமுகவிற்கே சாதகமாக அமையுமா என்பது மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.