“விஜய் எங்கே? அவர் ஏன் வீதிக்கு வந்து மக்களைச் சந்திக்கவில்லை?” என்ற கேள்விகள் அரசியல் களத்தில் ஆளுங்கட்சியாலும், எதிர்க்கட்சிகளாலும் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன. ஆனால், இந்த விமர்சனங்களுக்கு பின்னால் இருக்கும் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், அவர்கள் தேடும் ‘விஜய்’ இப்போது வீதிகளில் இல்லை, மக்களின் ஆழமான மனங்களில் குடியேறியிருக்கிறார்.
திராவிடக் கட்சிகள் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழகத்தை ஒரு ‘இருமுனை போட்டி’ என்ற வட்டத்திற்குள்ளேயே சுழல வைத்தன. எத்தனை முறை ஆட்சி மாறினாலும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மாறவில்லை என்ற ஆதங்கம் ஒரு மௌன புரட்சியாக வெடிக்கக் காத்திருக்கிறது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எத்தனை கோடி ரூபாய்களை வாரி இறைத்தாலும், எத்தனை புதிய இலவசங்களை அறிவித்தாலும், “போதும் இந்த பழைய அரசியல்” என்ற முடிவுக்கு நடுநிலையாளர்களும் இளைஞர்களும் வந்துவிட்டனர்.
விஜய்யின் பலம் என்பது அவர் மேடையில் பேசும் அடுக்குமொழி வசனங்கள் அல்ல; அவர் மீது இளைஞர்கள் வைத்துள்ள நம்பிக்கை. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக ஊடகங்கள் வழியாகவும், தங்களின் அன்றாட அனுபவங்கள் வழியாகவும் அரசியலை தீர்மானிக்கிறார்கள். பாரம்பரியக் கட்சிகள் நடத்தும் ‘பழைய பாணி’ பேரணிகளை விட, விஜய்யின் அமைதியான ஆனால் உறுதியான அரசியல் நகர்வுகள் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.
வழக்கமாக பண பலமும், அதிகார பலமும் தேர்தலை தீர்மானிக்கும். ஆனால் இந்த முறை, “மக்களின் மன உறுதி” தேர்தலை தீர்மானிக்கப் போகிறது. இறுதியாக, மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, “யார் களத்தில் இருந்தார்? யார் மக்கள் மனதில் இருந்தார்?” என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.