தமிழகத்தில் பாஜக தயவில் ஆட்சி அமைந்தால் ‘தட்சிண பிரதேசம்’ என பெயர் மாற்றப்படலாம்.. முதல்வர் ஸ்டாலின் அச்சம்.. தமிழ்நாட்டை கோபாலபுர பிரதேசமாக மாறுவதை தடுக்க முயற்சிக்கிறோம்.. முதல்வரின் அச்சத்திற்கு பதிலடி கொடுத்த எஸ்.ஜி.சூர்யா..

தமிழக அரசியல் களத்தில் அண்மைக்காலமாக ஆளுங்கட்சியான திமுகவிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான வார்த்தை போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, “பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற பெயர் ‘தட்சிண பிரதேசம்’ என்று மாற்றப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா மிக கடுமையான பதிலடியை தந்துள்ளார்.

தட்சிண பிரதேசம் என்ற பெயர் மாற்றம் குறித்து முதல்வர் பேசுவது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி என்றும், உண்மையில் தமிழகம் தற்போது ‘கோபாலபுர பிரதேசமாக’ மாறிக்கொண்டிருப்பதைத் தடுப்பதே தங்களின் லட்சியம் என்றும் சூர்யா தனது உரையில் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் மிக முக்கியமான துறையான சினிமா துறையில் நிலவும் ஏகபோக ஆதிக்கம் குறித்து எஸ்.ஜி. சூர்யா தனது உரையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். இன்று தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றாலோ அல்லது அதை திரையரங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாலோ ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் தயவு தேவைப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

ஒரு குடும்பம் மட்டுமே படங்களை தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் முடியும் என்ற நிலை உருவானால், மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். வணிக ரீதியாக சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய திரையுலகம், இன்று அரசியல் அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருப்பது தமிழகத்தின் கலை மற்றும் வணிக சூழலை வெகுவாக பாதித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

சினிமா மட்டுமல்லாது, தமிழக அரசின் பிரதான வருவாய் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் நிர்வாகத்திலும் திமுகவினர் தலையீடு அதிகம் இருப்பதாக எஸ்.ஜி. சூர்யா சாடியுள்ளார். டாஸ்மார்க்கிற்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமானவையாகவே இருக்கின்றன என்றும், அங்கு தரமான மதுபானங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். பிற நிறுவனங்கள் உள்ளே நுழைய முடியாதபடி ஒரு மறைமுக தடை நிலவுவதாக குறிப்பிட்ட அவர், குடிநீர் உற்பத்தி முதல் அனைத்து சிறு குறு தொழில்கள் வரை திமுகவினர் ஒருவரே ஆதிக்கம் செலுத்துவது மற்ற வணிகர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறியுள்ளார். அரசின் கொள்கை முடிவுகள் பொதுமக்களுக்கானதாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட கட்சியினரின் வணிக லாபத்திற்காகவே எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் ஒவ்வொரு வணிக பிரிவிலும் திமுகவினர் கால்பதித்து வருவதால், தமிழகம் ஏற்கனவே ‘பாதி கோபாலபுர பிரதேசமாக’ மாறிவிட்டது என்ற கடுமையான விமர்சனத்தை சூர்யா முன்வைத்துள்ளார். இந்த ஆதிக்கம் மேலும் தொடர கூடாது என்பதற்காகவே பாஜக களத்தில் போராடி வருவதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சர் மாநிலத்தின் பெயர் மாற்றத்தை பற்றி பேசி பயமுறுத்துவதை நிறுத்திவிட்டு, மாநிலத்தின் வளங்கள் ஒரு குடும்பத்திடம் குவிவதை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்று அவர் கூறினார்.

Leave a Comment