தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து நிலவி வந்த “சமூக வலைதள அலை” என்ற பிம்பத்தை, இந்த தேர்தல் முடிவுகள் உடைத்தெறிந்துள்ளன. தவெக என்பது வெறும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மட்டும் இயங்கும் ஒரு போலி அலை என்று விமர்சித்தவர்களுக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் களத்தில் நின்று பதிலடி கொடுத்துள்ளனர்.
சமூக வலைதளத்தைப் பார்த்தே பலரும் பயந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் நிஜத்தில் அங்கு ஒன்றும் இல்லை” என்று ஆளுங்கட்சியினரும் மற்ற எதிர்க்கட்சியினரும் கூறி வந்த நிலையில், தவெகவினர் பூத் வாரியாக தங்கள் பலத்தை நிரூபித்து காட்டியுள்ளனர்.
ஆரம்பத்தில், “விஜய்யால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? ஒவ்வொரு பூத்திற்கும் ஆட்களை போட முடியுமா?” என்று பலமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், தேர்தல் நாளில் அந்த சந்தேகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகின. பாரம்பரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் தழும்பேறிய அரசியல்வாதிகளுக்கு இணையாக, தவெகவின் இளைஞர் படை பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை வாக்குப்பதிவு முடிந்து ‘ஃபார்ம் 17’ பெற்று, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அவை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் வரை அந்த இளைஞர்கள் களத்தை விட்டு நகரவில்லை. அரசியலில் அனுபவம் இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இந்த பசங்க, தேர்தல் நடைமுறைகளை அணுவணுவாக கற்றுக்கொண்டு ஒரு தேர்ந்த அரசியல்வாதியை போல செயல்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட மக்களின் மனநிலைதான். ஒரு தொகுதியில் தவெக இத்தனை வாக்குகள் வாங்கும் என்று யாராலும் துல்லியமாக சொல்ல முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. 100, 200 போன்ற எளிய எண்களால் இந்த மாற்றத்தை அளவிட முடியாது. “இவர்கள் கண்டிப்பாக விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” என்று சிலரை பற்றி நாம் உறுதியாக நினைத்திருந்தோமோ, அவர்களே ஆச்சரியப்படும் வகையில் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு முடிந்து வெளியே வந்த பிறகு, “நாங்கள் யாருக்கும் தெரியாமல் மாற்றத்திற்காக விஜய்க்குத்தான் வாக்களித்தோம்” என்று அவர்கள் போன் செய்து சொல்லும்போது, அது மற்ற அரசியல் கட்சியினருக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளை சமாளிப்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல. அவர்களிடம் ஆள்பலம், பணபலம் மற்றும் பல ஆண்டுகால தேர்தல் அனுபவம் இருக்கிறது. ஆனால், அந்த பிரம்மாண்டத்தை எதிர்த்து, எவ்வித பயமும் இன்றி தவெக இளைஞர்கள் களத்தில் நின்றது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கமாகும். “பசங்களுக்கு என்ன தெரியும்?” என்று இளக்காரமாக பேசியவர்களின் வார்த்தைகளை தேர்தல் களத்தில் அவர்கள் செயலில் முறியடித்துள்ளனர். கடைசி வரை பூத்தில் அமர்ந்து சண்டை போட்டு, தங்கள் வாக்குகளை காப்பாற்றிய அந்த துணிச்சல் தான், இந்த தேர்தலை ஒரு விஸ்வரூப தேர்தலாக மாற்றியுள்ளது.
இறுதியாக, தமிழக வெற்றி கழகத்தின் இந்த எழுச்சி என்பது வெறும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு கூட்டம் அல்ல, அது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வு என்பது தெளிவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன, ஆனால் உண்மையான போர் பூத் மட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த மாற்றத்தை வாக்குகளாக மாற்றுவதற்கு ஒரு வலுவான கட்டமைப்பு தேவை. அதை தவெகவின் இளைஞர் படை இந்த முறை மிக சரியாக செய்து முடித்துள்ளது. ஜட்ஜ் பண்ணவே முடியாத இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த பல பிம்பங்கள் நிரந்தரமாக உடைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.