தமிழக தேர்தல் களத்தில் குழந்தைகள் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது குறித்த விவாதங்கள் தற்போது அனல் பறக்கின்றன. குறிப்பாக, திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக சிறுவர்கள் “உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்” என்று பரப்புரை செய்த காட்சிகளும், அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனங்களும் ஒரு அரசியல் நரேட்டிவ் ஆக மாற்றப்பட்டு வருகின்றன.
விஜய்யின் அரசியல் வருகை ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து கொள்ள முடியாமல், அவர் பேசுவது பேசுபொருளாவதை தடுப்பதற்காக சில தரப்பினர் “குழந்தைகள் அரசியலுக்கு வந்தால் எதிர்காலம் என்னவாகும்?” என்ற ஒரு செயற்கையான பயத்தை உருவாக்குகின்றனர். ஒரு குழந்தை எதையாவது கேட்டால் அதற்கு மாற்று வழியை காட்டி திசைதிருப்புவது எளிது, ஆனால் குழந்தைகளையே ஒரு அரசியல் கருவியாக மாற்றிவிட்டு, அதன் பழி முழுவதையும் ஒரு புதிய தலைவர் மீது சுமத்த பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இப்போது அக்கறையோடு பேசும் ஆட்சியாளர்கள், நிஜத்தில் தமிழக குழந்தைகள் சந்திக்கும் அபாயங்கள் குறித்து மௌனம் காப்பது ஏன் என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு வயது குழந்தை முதல் சிறுவர்கள் வரை எத்தனையோ பேர் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் கொடுமைகள் இங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அறிக்கைகளின்படி, 2023-ஆம் ஆண்டை விட 2024-இல் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை குற்றங்கள் உங்கள் ஆட்சியின் கீழ் நடக்கும்போது எழாத அந்த பதற்றமும், அக்கரையும், ஒரு தலைவர் மக்களிடம் பேசும்போது மட்டும் திடீரென்று பொங்குவது ஏன்? குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்காதவர்களுக்கு, அரசியல் வாக்குகளை பற்றிப் பேசும்போது மட்டும் இவ்வளவு அக்கறை வருவது வேடிக்கையாக உள்ளது.
பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பவே பயந்து, அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்த ஒரு பழைய இருண்ட காலம் இன்றும் ஏதோ ஒரு வடிவில் தொடர்வதற்கு காரணம் இங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளே ஆகும். இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டு, இப்போது ஒரு புதிய கட்சியின் நடவடிக்கைகளை கவனிப்பதில் மட்டும் இவ்வளவு தீவிரத்தை காட்டுகின்றனர். களத்தில் குற்றங்கள் நிகழும்போது, அதில் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்களாகவே இருக்கும் சூழல் கவலையளிக்கிறது. குற்றம் செய்தவர்களை “அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம்” என்று கூறி தப்பித்து கொள்வது மட்டுமே ஒரு தீர்வாகிவிடாது; உங்கள் கட்சியினருக்கு அடிப்படை ஒழுக்கத்தை கூட கற்றுக்கொடுக்கத் தவறியது யாருடைய குற்றம்?
அரசியல் தோல்வி பயத்தில் இருப்பவர்கள், தோல்விக்கு எதையாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். ஒரு தலைவர் பேசினார், அதன் மூலம் வாக்குகள் வரும் அல்லது வராது என்பது வேறு விஷயம். ஆனால், ஒரு கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குறை கண்டுபிடித்து, “பொறுப்புணர்வு” பற்றி பாடம் எடுப்பவர்கள், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகளுக்கு எப்போது பொறுப்பேற்க போகிறார்கள்? அடுத்த ஆண்டு குற்றங்களை குறைப்பதற்கோ அல்லது முற்றிலுமாக தடுப்பதற்கோ எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் மேடை பேச்சோடு நிறுத்தி கொள்வது மக்களின் கண்களில் மண்ணை தூவும் செயலாகும்.
இறுதியாக, குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் அது எல்லாச் சூழல்களிலும் சமமாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் குற்றங்கள் பெருக அனுமதித்துவிட்டு, மறுபக்கம் ஒரு புதிய தலைவர் மீது பழி போட துடிப்பது “அழுகணி ஆட்டம்” ஆடுவதை போன்றது. பொறுப்பு என்பது கேள்வி கேட்பதில் மட்டும் இல்லை, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது பாதுகாப்பு வழங்குவதிலும் இருக்கிறது. உங்கள் கட்சியில் இருப்பவர்களுக்கே ஒழுக்கத்தை சொல்லி கொடுக்காதவர்கள், அடுத்தவர்களுக்கு வகுப்பு எடுப்பது நகைப்புக்குரியது. தமிழக மக்கள் எதார்த்தத்தை புரிந்து வைத்துள்ளனர்; எது உண்மையான அக்கறை, எது அரசியல் நாடகம் என்பது மே 4-ஆம் தேதி முடிவுகளில் வெளிச்சத்திற்கு வரும்.