இத்தனை வருடம் எம்பியாக இருந்தும் குடிநீர் பிரச்சனையை கூட தீர்க்கவில்லை.. மக்கள் இன்னும் உப்பு தண்ணீரை குடித்து வாழ்கின்றனர்.. 90% மக்கள் தங்கள் எம்பியை நேரில் பார்த்ததே இல்லை.. சிவகெங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மீது தவெக காரைக்குடி வேட்பாளர் டாக்டர் பிரபு குற்றச்சாட்டு..!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவடைந்து ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்க, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் அது குறித்த மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியம் தவெக காரைக்குடி வேட்பாளர் டாக்டர் பிரபு சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கார்த்திக் சிதம்பரம் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:

பல ஆண்டுகளாக சிவகெங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், அந்த பகுதியில் வாழும் மக்களின் மிக அடிப்படையான குடிநீர் தேவையைக்கூட பூர்த்தி அவர் செய்யவில்லை என்பது ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில், குறிப்பாக காரைக்குடி போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய 80 சதவீத கிராமங்களில் இன்னும் குடிக்க தண்ணீர் இல்லை என்பது வேதனையளிக்கும் நிதர்சனம். மக்கள் உப்பு தண்ணீரை குடித்தே பழகிவிட்டோம் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது, இத்தனை ஆண்டுகால அரசியல் நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது. “நாங்கள் இந்திய நாட்டின் பிரஜைகள், ஆனால் எங்களுக்குக் குடிக்க ஒரு குடம் நல்ல தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை” என்று அந்த மக்கள் எழுப்பும் குமுறல், வெறும் அரசியல் பேச்சல்ல, அது அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம். நாடாளுமன்றத்தில் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், களத்தில் இறங்த் தீர்வுகளைக் கொண்டுவராத மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் கொண்டுள்ள ஆத்திரம் நியாயமானதே.

கிராமப்புறங்களில் ஒரு குடம் குடிநீரை 15 ரூபாய் கொடுத்து வாங்கும் அவலநிலை நீடிக்கிறது. அன்றாட கூலி வேலைக்கு கூட வழியில்லாத முதியவர்களும் வசதி குறைந்தவர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அரை குடம் தண்ணீரை கடனாக பெற்று தங்கள் தாகத்தை தணித்துக் கொள்கின்றனர். ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவையைக்கூட கடனாகப் பெறும் நிலையில் மக்கள் இருக்கும்போது, அவர்களின் பிரதிநிதியாக இருப்பவர் அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய மோசமான நிலையில் ஒரு தொகுதியை வைத்திருப்பது, அந்தப் பகுதி மக்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

தொகுதிக்குத் தேவையான பணிகளை செய்யாமல், தொலைக்காட்சி விவாதங்களிலும் செய்தி பேட்டிகளிலும் மட்டுமே தோன்றும் “டிவி அரசியல்” கலாச்சாரம் மக்கள் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. 90 சதவீத மக்கள் தங்கள் தொகுதி எம்பியை நேரில் பார்த்ததே இல்லை என்றும், தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி என்றும் குறிப்பிடுவது கள எதார்த்தத்தை அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகிறது. எப்போதோ ஒருமுறை வந்து தலைகாட்டிவிட்டு செல்பவர்கள் மக்களின் உண்மையான வலியை அறியமாட்டார்கள். மக்கள் மத்தியில் இருந்து வரும் குமுறலை வெளிப்படுத்தும் போது, அது சில நேரங்களில் ஆக்ரோஷமான தாக்குதலாகத் தெரிந்தாலும், அது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகவே ஒலிக்கிறது.

அரசியலில் ஒருவரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதோ அல்லது கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதோ ஒருபோதும் தீர்வாகாது. மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து நடக்கும் விவாதங்களே ஆரோக்கியமானவை. அந்த வகையில், குடிநீர் பிரச்சனை போன்ற அடிப்படை வாழ்வாதார சிக்கல்களை சுட்டிக்காட்டி மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமான கடமையாகும். மக்களின் மனக்குமுறலை உணர்ந்து செயல்படாத எவரும் நீண்ட காலம் மக்கள் மனதில் நிலைத்திருக்க முடியாது என்பதே சிவகங்கை தொகுதி மக்கள் தற்போது அளித்து வரும் எச்சரிக்கையாகும்.

Leave a Comment