தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய அரசமைப்பு சட்ட நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விசிக மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 இடங்களை பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஆளுநரை சந்திப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 என்ற எண்ணிக்கையை தாண்டி 120 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும், ஆளுநர் மாளிகையின் இந்த மௌனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் 16-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் நாளை (மே 10) முடிவடைய உள்ள நிலையில், ஆளுநர் அர்லேகர் திடீரென கேரளா சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆளுநர் மாளிகைக்கு வருவார் என்று தெரிந்தே, வேண்டுமென்றே ஆளுநர் இந்த பயணத்தை மேற்கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு கட்சித் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது, ஆளுநர் மாநிலத்தில் இல்லாதது என்பது திட்டமிட்ட ஒரு முட்டுக்கட்டையாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. இது புதிய அரசு பதவியேற்பதை தள்ளிப்போடும் ஒரு உத்தியாகவே கருதப்படுகிறது.
இந்த தாமதத்திற்குப் பின்னால் டெல்லி மேலிடத்தின் மிகப்பெரிய திட்டம் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. தவெக தலைமையிலான புதிய அரசு அமையாமல் தடுப்பதன் மூலம், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளை நள்ளிரவுக்குள் புதிய முதல்வர் பதவியேற்காவிட்டால், சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடைந்துவிடும் என்பதால், ஆளுநர் தானாகவே குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க முடியும். இதன் மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழகத்தை ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மேலிடம் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், வெறும் கையோடு வீடு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “மக்களின் தீர்ப்பு கேலி செய்யப்படுகிறது” என தவெக தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தவெக-விற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், இப்போது ஆளுநர் மாளிகையும் அதே பாதையில் செல்வது தமிழக அரசியலில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதம் இருந்தும் அழைப்பு வராதது, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
நாளை மாலைக்குள் கேரளா சென்ற ஆளுநர் திரும்பி வராவிட்டால் அல்லது விஜய்யைப் பதவியேற்க அழைக்கத் தவறினால், தமிழகம் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆளுநர் ஆட்சியை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படும். இது ஒருபுறம் இருக்க, தவெக தரப்பில் இருந்து ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. “மேஜிக் நம்பர்” கைவசம் இருந்தும், அதிகார வர்க்கத்தின் காய்நகர்த்தல்களால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி இன்னும் விடை தெரியாத புதிராகவே நீடிக்கிறது. வரும் சில மணிநேரங்கள் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்த காத்திருக்கின்றன.