1969ல் இருந்து 50 வருடங்கள் கருணாநிதி திமுக தலைவராக இருந்தார்.. அவரது மறைவிற்கு பின் ஸ்டாலின் தலைவர்.. ஸ்டாலினுக்கு பின் உதயநிதி.. இந்த மன்னர் பரம்பரை தான் திமுகவின் பின்னடைவுக்கு காரணம்.. இந்த அடிப்படையை மாற்றாமல் மாவட்ட செயலாளரை மாற்றுகிறேன், வயது நிபந்தனை வைக்கிறேன் என்று சொன்னால் அது வெறும் பூச்சாண்டி.. முதல் குடும்பத்தினர் அனைவரும் திமுகவில் இருந்து வெளியேறினால் அந்த கட்சி புத்துணர்ச்சி பெற வாய்ப்பு உண்டு.. இல்லையேல் வாய்ப்பில்லை ராஜா தான்…
திமுகவில் மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறோம், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப் போகிறோம் என்று அவ்வப்போது பேச்சுகள் கிளம்புகிறது. ஆனால், “இது எல்லாமே வெளியில காட்டுற பூச்சாண்டிதான்; உண்மையில பெரிய மாற்றம் எதுவும் வரப்போறதில்லை” என்று கட்சிக்குள்ளேயே சில தொண்டர்கள் பேசுவதாக சொல்லப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு, அதையே மிகப்பெரிய சீரமைப்பாக காட்டினால் மட்டும் கட்சிக்கு புத்துணர்ச்சி வந்துவிடுமா என்பதும் கேள்வியாக இருக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரை குடும்ப அரசியல் என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கருணாநிதி 1969ஆம் ஆண்டு திமுக தலைவராக பதவியேற்றார். அவர் இறந்த 2016ஆம் ஆண்டு வரை அதாவது சுமார் 50 வருடங்கள் தலைமை பொறுப்பில் இருந்தார்ல்.. அவருக்குப் பிறகு ஸ்டாலின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். இப்போது அடுத்த தலைமுறையாக உதயநிதியின் பெயரும் தொடர்ந்து பேசப்படுகிறது. இதனால், “ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைமைப் பதவி ஏன் தொடர்ந்து ஒரே குடும்பத்தை சுற்றியே இருக்க வேண்டும்?” என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். பொதுமக்கள் மத்தியில் இந்த விமர்சனம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் திமுக கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதே பிரச்சினை மாவட்ட அளவிலும் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சில மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஒரே நபர்கள்தான் கட்சியின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக வேலூர் போன்ற மாவட்டங்களில் நீண்ட காலமாக செல்வாக்குடன் இருக்கும் மூத்த தலைவர்களை தாண்டி புதியவர்கள் வளர்வது எளிதல்ல என்ற பேச்சும் இருக்கிறது. இதுபோன்ற நிலை தொடர்ந்தால், கட்சியில் புதிய தலைமுறை உருவாகும் வாய்ப்பு குறைந்துவிடும்.
இளைஞர்களை கட்சிக்குள் அழைத்து வருவது மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான பொறுப்பும் அதிகாரமும் கொடுக்க வேண்டும். தேர்தல் வந்தவுடன் மட்டும் புதிய முகங்களை முன்னிலைப்படுத்திவிட்டு, முக்கிய பதவிகளில் பழைய முகங்களையே தொடர்ந்து வைத்திருந்தால் மாற்றம் எப்படி வரும்? பல ஆண்டுகளாக ஒரே குழுவினர் பதவியில் இருப்பது கீழ்மட்ட தொண்டர்களிடையே அதிருப்தியை உருவாக்கும் என்பதும் திமுகவுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.
வயது வரம்பு கொண்டு வருவது, சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் மட்டும் போதாது. கட்சியின் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை செயல்படும் முறையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. களத்தில் உழைப்பவர் யார், மக்களுடன் தொடர்பில் இருப்பவர் யார், கட்சிக்காக உண்மையாக பணியாற்றுபவர் யார் என்பதன் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட்டால்தான் புதிய தலைமுறை உருவாகும்.
இல்லையென்றால் “புது ரத்தம் பாய்ச்சுகிறோம்” என்ற வார்த்தை வெறும் அறிவிப்பாகவே முடிந்துவிடும். திமுக உண்மையாக புத்துணர்ச்சி பெற வேண்டுமென்றால், மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தை தாண்டி கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். “ஒரு சில முகங்களை மாற்றுவது சீரமைப்பு இல்லை… புதிய தலைமுறைக்கு கதவை திறப்பதுதான் உண்மையான மாற்றம்!” என்பதே இப்போது திமுக எதிர்கொள்ளும் முக்கியமான அரசியல் கேள்வியாக உள்ளது.