பூச்சாண்டியக் காட்டி மிரட்டின காலம் முடிஞ்சு போச்சு… புயலாக் கிளம்பி வந்த விஜய்ய மக்கள் அரியணையில ஏத்தியாச்சு! கூட்டணிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கொள்கைக்குக் கொடுத்திருந்தா… இன்னைக்கு ‘உதயசூரியன்’ இருட்டுல போயிருக்காது!

ஐம்பதாண்டு கால அரசியல் ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்த 2026 தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஒரு கசப்பான பாடத்தைக் கற்பித்துள்ளன. எதற்கெடுத்தாலும் “பாஜக எதிர்ப்பு” எனும் ஒரே ஆயுதத்தை மீண்டும் மீண்டும் ஏவியது, இம்முறை வாக்காளர்களிடம் எடுபடவில்லை. நிர்வாகக் குளறுபடிகளை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட இந்தத் தற்காப்பு உத்தியைப் பொதுமக்கள் “பாஜக பூச்சாண்டி” எனப் புறக்கணித்ததுடன், வெற்று அரசியல் முழக்கங்களை விட ஆக்கப்பூர்வமான தீர்வுகளுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

கூட்டணி மேலாண்மையில் திமுக செய்த தவறுகளும் அதன் வீழ்ச்சியை வேகப்படுத்தின. வாக்கு வங்கி சரிந்த கட்சிகளுக்கு அதிக இடங்களை வாரி வழங்கியது, அக்கட்சியின் சொந்த பலத்தை பலவீனப்படுத்தியது. குறிப்பாக, களத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குள் நிலவிய முரண்பாடுகளும், ஒருமித்த செயல்பாடின்மையும் பல தொகுதிகளில் வாக்குகளைச் சிதறடித்தன. இது வெறும் அரசியல் தோல்வி மட்டுமல்ல, ஒரு தவாறான வியூகத்தின் விளைவு என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன.

தமிழகம் முழுவதும் வீசிய ஆட்சி எதிர்ப்பு அலை, ஒரு சுனாமியைப் போல திமுகவின் பலமான கோட்டைகளைத் தரைமட்டமாக்கியுள்ளது. குடும்ப அரசியல் மீதான சலிப்பு, விலைவாசி உயர்வு போன்ற அன்றாடப் பிரச்சினைகளால் தவித்த மக்கள், “டெல்லிக்கு எதிரானப் போர்” போன்ற உணர்ச்சிகரமான வசனங்களை நிராகரித்துவிட்டு, எதார்த்தமான மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இந்த அதிருப்தி அலை, திராவிட அரசியலின் நீண்டகால வாக்கு வங்கியில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு வெறும் “சினிமா பிம்பமாக” மட்டுமே திமுக மேலிடம் கருதியது அதன் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகிப்போனது. விஜய்யின் அரசியல் ஆளுமையையும், அவருக்குப் பின்னால் திரண்ட இளைஞர் சக்தியையும் குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக, திமுகவின் பாரம்பரிய வாக்குகள் தவெக-வின் பக்கம் மடைமாறின. புதிய தலைமுறையின் நாடித்துடிப்பை அறியத் தவறியதே திமுகவின் இந்தத் தடுமாற்றத்திற்கு அடிப்படை காரணமாகும்.

மொத்தத்தில், அமைச்சர்கள் மீதான மக்களின் கடும் கோபம், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பின்மை மற்றும் மாற்றத்திற்கான மக்களின் தாகம் எனப் பல காரணிகள் இணைந்து திமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியுள்ளன. கால மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை புதுப்பித்துக் கொள்ளத் தவறியதும், ஒரு புதிய அரசியல் சக்தியின் வருகையை அலட்சியப்படுத்தியதும் திமுகவை வீழ்த்தியுள்ளன. இது ஒரு சகாப்தத்தின் முடிவா அல்லது திமுகவிற்கான ஒரு எச்சரிக்கை மணியா என்பதை வரும் காலங்களே தீர்மானிக்கும்.

Leave a Comment