தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் த.வெ.க-வின் ஆதவ் அர்ஜுனா மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் இடையிலான உறவுதான். அண்மையில் நடந்த த.வெ.க கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் மீதான தனது மரியாதையையும், திமுக அரசு மீதான தனது ஆதங்கத்தையும் மிகவும் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.
குரு – சீடன் உறவு”பிரிவே இல்லை!”
“நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை” என்று தனது உரையைத் தொடங்கிய ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனுக்கும் தனக்கும் இடையிலான பிணைப்பை நெகிழ்ச்சியுடன் விவரித்தார். “திருமா அண்ணன் என்னுடைய கொள்கை ஆசான். கடந்த இரண்டு வருடங்களாக அவருடன் பயணித்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மனதளவில் எங்களுக்குள் எந்தக் காலத்திலும் பிரிவு வந்ததே இல்லை” என உருக்கமாகத் தெரிவித்தார்.
திமுக அட்டாக்:
ஆசான் மீது பாசத்தைப் பொழிந்த அதே வேளையில், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார் ஆதவ் அர்ஜுனா. குறிப்பாக வி.சி.க-வுக்கு திமுக ஆட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“நான்கரை வருட திமுக ஆட்சியில் அண்ணன் திருமாவளவனுக்கு என்ன மரியாதை கொடுக்கப்பட்டது?..ஒரு உணர்வுள்ள மாணவனாக நான் இதைக் கேட்கிறேன். அவருக்கு உரிய அங்கீகாரம் இங்கே கிடைக்கவில்லை.” என்று பொங்கிய அவர், வி.சி.க தொண்டர்களின் மனக்குமுறலையே தான் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
அரசியல் சலசலப்பு:
வி.சி.க-விலிருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு, ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து திமுக – வி.சி.க கூட்டணி குறித்துப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “அரசியல் களம் வேறாக இருந்தாலும், என் ஆசானின் நலம் மீது எனக்கு எப்போதும் அக்கறை உண்டு” என்று அவர் கூறுவது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய வியூகமாக இருக்குமோ எனப் பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் த.வெ.க-வின் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ அராஜகம் குறித்த விமர்சனங்கள் எழ, மறுபக்கம் ஆதவ் அர்ஜுனாவின் இந்த ‘சென்டிமென்ட் + அட்டாக்’ அரசியல் தமிழக அரசியலை இன்னும் சூடாக்கியுள்ளது.