என்னங்கடா 50 வருஷமா சமூகநீதி ஆட்சி நடத்தியிருக்கீங்க.. பட்டியல் இனத்தவர் பஸ்ல ஏறி உட்கார்ந்துருவாங்கன்னு, அந்த கிராமத்துக்கே 21 வருஷமா பஸ் விடலை.. இன்னும் எத்தனை கிராமம் தான் தமிழ்நாட்டுல இருக்குது.. தவெக ஆட்சி வரலைன்னா இதெல்லாம் கடைசி வரைக்கும் தெரியாம போயிருக்கும்.. பட்டியல் இன தலைவருக்கே பிளாஸ்டிக் சேர் போட்டவங்க தானே நீங்க.. இதெல்லாம் ஒன்னும் ஆச்சரியமில்லை.. ஆனால் இனிமேல் அதெல்லாம் நடக்காது.. ஒவ்வொரு கிராமத்துக்கும் பஸ் போகும்.. சமூக நீதின்னா என்னன்னு எங்ககிட்ட டியூஷன் படிச்சி தெரிஞ்சிக்கோங்க…
கோவை காந்திபுரம் மைய பேருந்து நிலையத்திலிருந்து கெம்பனூர் வரை இயக்கப்படும் எண் 21 கொண்ட அரசு நகர பேருந்து, கெம்பனூரில் பட்டியலின மக்கள் மிகுதியாக வசிக்கும் அண்ணாநகர் பகுதிக்குள் செல்லாமல் பல ஆண்டுகளாக திருப்பி விடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது. அண்ணாநகருக்குள் பேருந்து சென்றால் அங்குள்ள பட்டியலின மக்கள் பேருந்தில் அமர்ந்து பயணம் செய்வார்கள் என்றும், அதன் பிறகு ஏறும் உயர்ஜாதிகள் நின்றுகொண்டு பயணிக்க நேரிடும் என்ற சாதிய தீண்டாமை மற்றும் வன்மத்தின் காரணமாகவே இந்த பேருந்து சேவை பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அன்றாட கூலி வேலைக்குச் செல்வோர்கள் என அனைவரும் பல கிலோமீட்டர் தொலைவு கால் கடுக்க நடந்து செல்ல வேண்டிய துயர நிலை நீடித்து வந்தது.
அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த பேருந்து சேவைக்காக கிட்டத்தட்ட 40 முதல் 45 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். பள்ளிச் செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முறையான போக்குவரத்து வசதி இல்லாமல் பாம்புகள் மற்றும் பூச்சிகள் நிறைந்த பாதைகளில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பெரும் இன்னல்களைச் சந்தித்தனர். அவசர தேவைகளுக்கோ அல்லது மருத்துவமனை செல்வதற்கோ கூட கெம்பனூர் சென்றுதான் பேருந்து ஏற வேண்டிய கட்டாயம் இருந்ததால், பலரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கூட இதனால் கேள்விக்குறியாகின. பல தலைமுறைகளாக தொடர்ந்த இந்த சாதிய ஒடுக்குமுறை மற்றும் போக்குவரத்து புறக்கணிப்பு அப்பகுதி மக்களை மிகுந்த மன உளைச்சலுக்கும் பொருளாதார இழப்புக்கும் ஆளாக்கியது.
இந்தச் சூழலில், அண்மையில் கோவை மாவட்டத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கெம்பனூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது 21 ஆண்டு கால கண்ணீர் கோரிக்கையையும் துயரங்களையும் எடுத்துக் கூறி மனு அளித்தனர். மக்களின் கோரிக்கையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்களை அழைத்து அவசர கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டார். அரசின் பொது சேவை என்பது சாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், உடனடியாக அண்ணாநகர் பகுதிக்குள் அரசு பேருந்தை இயக்க அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அமைச்சரின் துரிதமான ஆணையைத் தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து சாதிய தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு அண்ணாநகர் பட்டியலின குடியிருப்பு பகுதிக்குள் எண் 21 கொண்ட அரசு பேருந்து மிடுக்காக நுழைந்தது. தங்களது பகுதிக்குள் முதன்முறையாக அரசு பேருந்து வந்து சேர்ந்ததை கண்ட பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு பேருந்திற்கு மலர்தூவி வரவேற்றனர். மேலும், பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு இனிப்புகளை வழங்கி தங்களது நீண்ட கால போராட்டத்தின் வெற்றியைப் பெருமிதத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த பேருந்து சேவை கிடைத்துவிட்டது என்பது வெறும் போக்குவரத்து வசதிக்காக மட்டுமல்லாமல், தலைமுறைகளாக சமூகத்தின் விளிம்புநிலையில் திணிக்கப்பட்ட சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு மாபெரும் அடையாள வெற்றியாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அதிகாரவர்க்கத்தின் பார்வையில் படாமல் இருந்த இத்தகைய கிராமப்புற மற்றும் உட்கிராமச் சிக்கல்கள், உரிய அரசியல் மற்றும் சமூகத் தலையீடுகள் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.
சமூக நீதி பேசும் ஆட்சியதிகாரத்திலும் கூட இது போன்ற தீண்டாமைச் சுவர்கள் எஞ்சி நிற்பது வருத்தமளிப்பதாக இருந்தாலும், மக்கள் தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் பட்சத்தில் மாற்றங்கள் சாத்தியம் என்பது இதன் மூலம் புலனாகிறது. அண்ணாநகர் மக்கள் எதிர்கொண்ட இந்த அவல நிலை தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் இன்னும் நிலவி வரும் சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான ஒரு கண் திறப்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான உத்வேகமாகவும் இச்சம்பவம் அமைந்துள்ளது.