நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாளை (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பங்கேற்க அனுமதி கிடையாது என்று கட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முழுக்க முழுக்கப் புதுச்சேரி நிகழ்ச்சி :
நாளை காலை 10:30 மணிக்கு புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாகப் பல அதிரடி முடிவுகளைத் தவெக நிர்வாகம் எடுத்துள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
நுழைவுச் சீட்டு:
அனுமதிக்கப்படும் 5,000 பேரும் QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு (Pass) வைத்திருப்பது கட்டாயம். புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உட்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இந்தக் கூட்டத்தில் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
முன்னதாக, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற சில கூட்டங்களில் ஏற்பட்ட பெரும் கூட்டம் மற்றும் நெரிசல் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்ததைத் தொடர்ந்து, காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, அருகில் உள்ள தமிழக மாவட்டங்களில் இருந்து அதிகப்படியானோர் வருவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டே, இந்தப் பிரத்தியேக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கழகத் தோழர்களும் பொதுமக்களும் விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும், அனுமதி மறுக்கப்பட்டதால் யாரும் தவறாக எண்ண வேண்டாம் என்றும் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.