போர் வேண்டுமானால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இருக்கலாம், ஆனால் வின்னர் என்னவோ சீனா தான்.. ஈரான் விதித்த் 10 நிபந்தனைகளை ’முடியாது’ என்று சொல்ல முடியாத இடத்தில் நிற்கும் டிரம்ப்..!

தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல், அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் இதில் பாகிஸ்தானின் மறைமுகமான ‘தரகர்’ வேலைகள் குறித்து சர்வதேச அரசியல் அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 27-ம் தேதி வரை ஹார்முஸ் நீரிணை சர்வதேச நீர்நிலையாக தடையின்றி இயங்கி கொண்டிருந்தது. ஆனால், போர் தொடங்கிய பிறகு ஈரான் அதை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இப்போது இரண்டு வாரங்களுக்கு மட்டும் அதை திறப்பதாக ட்ரம்ப் கூறுவது ஒரு பெரிய வெற்றியாக சித்தரிக்கப்படுகிறது.

ஆனால், உண்மையில் இது ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா பணிந்து போவதையே காட்டுகிறது. ஈரான் என்பது சாதாரண பயங்கரவாத குழு அல்ல; ஏமனில் இருந்துகொண்டே இஸ்ரேலை தாக்கும் வல்லமை படைத்த ஹூதி கிளர்ச்சியாளர்களை தனது ப்ராக்ஸிகளாக கொண்ட ஒரு பலமான நாடு. உலகின் 32 சதவீத எரிசக்தி விநியோகம் ஈரானின் கையில் இருப்பதை இந்த போர் நிரூபித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த பயணம் தள்ளிப்போனதற்கு காரணம், ஒரு போர் நடக்கும் சூழலில் வெற்றியாளராக அன்றி, பலவீனமானவராக தான் அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற பயம்தான். அமெரிக்காவில் வரவிருக்கும் இடைக்கால தேர்தல்கள் மற்றும் அங்கு நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு போன்றவை ட்ரம்பிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளன.

ஈரான் முன்வைத்துள்ள 10 நிபந்தனைகள் அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய அவமானமாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உத்தரவாதம், ஹார்முஸ் நீரிணை மீதான முழுமையான ஈரானிய இறையாண்மை, அணுசக்தி செறிவூட்டலை தொடரும் உரிமை, அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்குதல், ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை ரத்து செய்தல், அமெரிக்க தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் அகற்றுதல் போன்றவை அந்த நிபந்தனைகளில் அடங்கும். இவை அனைத்தையும் பாகிஸ்தான் மூலமாகத்தான் ஈரான் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் பங்கு இதில் ஒரு ‘கூரியர் பாய்’ வேலையே தவிர வேறில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் வெளியிட்ட ட்வீட் கூட அமெரிக்கர்களால் எழுதி கொடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவின் சொற்களுக்குக் கட்டுப்பட்டும், மறுபுறம் சீனாவின் பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளுக்காகவும் தவிக்கிறது. தனது சொந்த வெளியுறவுக் கொள்கை என்று எதுவுமின்றி, பாதியாக அமெரிக்காவிற்கும் பாதியாக சீனாவிற்கும் பாகிஸ்தான் விலைபோயுள்ளது.

இந்த சூழலில் சீனாதான் உண்மையான வெற்றியாளராக உருவெடுத்துள்ளது. ஈரானை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம், உலகின் எரிசக்தி விநியோகத்தின் ஒரு பகுதியை சீனா மறைமுகமாக கட்டுப்படுத்துகிறது. எனவே போர் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இருந்தாலும் வின்னர் என்னவோ சீனா தான்.

Leave a Comment