திமுகவுக்கும் ப்ரீ ஹிட்.. அதிமுகவுக்கும் ப்ரீ ஹிட்.. ஆடாமல் ஜெயிக்கும் திராவிட கட்சிகள்.. 62 தொகுதி திமுகவுக்கு ப்ரீ ஹிட்டுன்னா, அதிமுகவுக்கு 58 தொகுதி ப்ரீ ஹிட்.. மொத்தத்தில ரெண்டு கட்சியும் சேர்ந்து கூட்டணி கட்சிகளை காவு வாங்கிடும்போல தெரியுது..

கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் கிரிக்கெட் ஜுரம் எந்த அளவுக்கு பரவியிருக்கிறதோ, அதைவிட பல மடங்கு அனல் பறக்கும் வேகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் ‘ப்ரீ ஹிட்’ பந்துகள் கிடைத்தால் பேட்ஸ்மேன்கள் எப்படி தயக்கமின்றி சிக்ஸர்களை விளாசுவார்களோ, அதே பாணியில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 62 தொகுதிகளை தனது வெற்றிக்கான ‘ப்ரீ ஹிட்’ தொகுதிகளாக முதல்வர் ஸ்டாலின் வகைப்படுத்தியுள்ளார். திமுகவின் இந்த தந்திரமான வியூகம் அதிமுக கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 172 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதும் 121 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்பதால், ஸ்டாலினின் கவனம் தற்போது அதிமுகவின் தோழமை கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளை தனது ‘ஜாக்பாட்’ தொகுதிகளாக திமுக கருதுகிறது. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இந்த ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி இப்போதே வெற்றியை உறுதி செய்த நிலைக்கு வந்துவிட்டதாக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சர் சக்கரபாணியின் அசைக்க முடியாத செல்வாக்கிற்கு முன்னால், த.மா.கா அங்கு தேவாங்கு நிலையில் உள்ளது. அதேபோல் ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துசாமியை எதிர்த்து போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் யுவராஜா தொகுதிக்குள் போதிய அறிமுகம் இல்லாதது திமுகவுக்கு சாதகமாகியுள்ளது. இஸ்லாமிய வாக்குகள் அதிகம் கொண்ட ராணிப்பேட்டையில், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளரால் அமைச்சர் காந்திக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என நம்பப்படுகிறது. காங்கிரஸ் கோட்டையான கிள்ளியூர் மற்றும் திமுகவின் கோட்டையான கும்பகோணம் ஆகிய தொகுதிகளையும் எடப்பாடி பழனிசாமி த.மா.கா-வுக்கு தள்ளிவிட்டிருப்பது, திமுக வேட்பாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த தொகுதிப் பங்கீடு முடிவுகள், உண்மையில் திமுகவின் வெற்றியை எளிதாக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இரட்டை இலைச் சின்னம் நேரடியாக போட்டியிடும் இடங்களை விட, அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் திமுகவின் ‘ப்ரீ ஹிட்’ பேட்டிங் மிக வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ப்ரீ ஹிட் ஃபார்முலாவை எடப்பாடி பழனிசாமியும் பயன்படுத்துகிறார். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள், தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் உள்பட 58 தொகுதிகள் அதிமுகவுக்கு அல்வா சாப்பிடுவது போல் மொத்தமாக கிடைத்துவிடும்.. விசிக பெரும் குழப்பத்தில் இருப்பதால் 8ல் நான்கை அதிமுக கூட்டணி பறித்துவிடும்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் சின்ன சின்ன கட்சிகளின் வெற்றியும் கேள்விக்குறியே.. மொத்தத்தில் ஆடாமல் ஜெயிச்சோமடா என்ற இரு தரப்புக்கும் சில தொகுதிகளில் கிடைத்துள்ளது.

Leave a Comment