காசு கொடுத்தால்தான் சீட்டா?.. தவெக-வில் வெடித்த லஞ்சப் புகார்.. விஜய்க்கு தலைவலி கொடுக்கும் நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி விவகாரங்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான புகார்கள் காரணமாக அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.10 கோடி பேரம் பேசியதாகப் புகார்:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், நிர்வாகி அருள்ராஜ் என்பவர் ரூ.10 கோடி வரை பேரம் பேசியதாகத் தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “ஊழலற்ற அரசியல்” என்று கூறி வரும் நிலையில், கட்சிக்குள்ளேயே கோடிகளில் பேரம் பேசப்படுவது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அலுவலகம் முற்றுகை:
அருள்ராஜுக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தவெகவினர் பனையூர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தியதால் அங்கு கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

தொடரும் அதிருப்தி:
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தியில் இருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குக் கட்சி தயாராகி வரும் வேளையில், அடுத்தடுத்து மாவட்டங்களில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் ஊழல் புகார்கள் கட்சித் தலைமைக்குச் சவாலாக மாறியுள்ளன.

Leave a Comment