தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத ஒரு மாபெரும் திருப்புமுனையாக திமுக தலைமையிலான ‘மகா கூட்டணி’ தற்போதைய தேர்தல் களத்தில் முற்றிலும் உடைந்து சிதறியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதை பற்றி விவாதிக்கும் போது அரசியல் விமர்சகர்கள், “திமுக கூட்டணி என்பது ஒருமுறை உடைந்தால் மீண்டும் ஒட்ட வைக்க முடியாத ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றது; அது தற்போது அடியோடு உடைந்து நொறுங்கிவிட்டது” என்று மிக துல்லியமாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இதில் மாற்றுக்கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இந்த ஒட்டுமொத்த கூட்டணி உடைப்பில் இருக்கும் நிஜமான ‘அரசியல் நேர்மை’ என்ன என்ற கேள்விதான் தற்போது பிரதானமாக எழுப்பப்படுகிறது. கொள்கை கூட்டணி, முற்போக்கு கூட்டணி என்று இத்தனை காலம் மேடைக்கு மேடை பேசிவிட்டு, திமுகவோடு இவ்வளவு காலம் பயணித்த காங்கிரஸும், விடுதலை சிறுத்தைகளும், இடதுசாரிகளும் தங்களின் அமைச்சர் பதவிகளுக்காக தற்போதைய புதிய தவெக பக்கத்திற்கு தாவியிருப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகிறது என திமுக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
உண்மையில், இந்த திட்டமிட்ட கூட்டணி மாற்றம் என்பது ஏதோ நேற்றோ இன்றோ திடீரென தற்செயலாக நடந்தது அல்ல; மாறாக, இது நீண்ட நாட்களாக திரைமறைவில் தீட்டப்பட்ட ஒரு கூட்டு சதி என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஒரு பிரபல ஊடக விழாவில் இருந்தே இதற்கான ஆரம்பப்புள்ளி தொடங்கப்பட்டு, அங்கு நிலவிய நட்புகளின் மூலமாகவே இந்த திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ட்ராவல் ஆகிக் கொண்டிருந்தன. தவெக மாநாட்டில் முன்வைக்கப்பட்ட “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்திற்கு பின்னால், இந்த தோழமைக் கட்சிகளின் நீண்ட நாள் தாகமும், பேராசையும் ஒளிந்திருந்தது என்பது இப்போது அப்பட்டமாக தெரிகிறது. அந்த விழாவில் பேசப்பட்ட ஒவ்வொரு தனிப்பட்ட விஷயமும், இந்தத் தவெகவின் புதிய கூட்டணி மற்றும் அதிகார பகிர்வு உத்திகளோடு மிக துல்லியமாக லிங்க் செய்யப்பட்டுதான் காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன.
அரசியல் களத்தில் ஒருவருக்கு திமுகவை சுத்தமாக பிடிக்காமல் இருக்கலாம், அதன் கொள்கைகளோடு நூறு சதவீதம் முரண்பாடுகள் இருக்கலாம்; அது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்காக தேர்தலுக்கு முன்பே நேர்மையாக கூட்டணியை விட்டு வெளியேறி, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் அதை ஒரு முற்போக்கான அரசியல் தர்மமாக ஏற்று கொண்டிருக்கலாம். ஆனால், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற நபர்களின் செயல்பாடுகளை போல, உள்ளே இருந்து கொண்டே முதுகில் குத்தும் வேலைகளில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்? கடந்த தேர்தல்களில் திமுகவின் நிழலிலும், அதன் கடுமையான கள உழைப்பிலும், பண பலத்திலும் நின்று கொண்டுதான் 28 தொகுதிகளில் காங்கிரஸும், தலா ஐந்து தொகுதிகளில் கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் வெற்றி பெற்று தங்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொண்டனர்.
திமுக தன் சொந்த காசைச் செலவு செய்து, தங்களின் ஒட்டுமொத்த தொண்டர்களையும் இரவு பகலாக வேலை பார்க்க வைத்து, கூட்டணிக் கட்சிகளை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என்று எல்லா வழிகளையும் பார்த்து பார்த்து உழைத்தது. அப்படித் திமுகவின் உழைப்பில் பதவிகளை பெற்றுவிட்டு, தேர்தல் முடிந்து தங்களுக்கு சாதகமான சூழல் வந்தவுடன், கொஞ்சமும் அரசியல் நேர்மையோ அல்லது நன்றியுணர்ச்சியோ இல்லாமல் தவெக பக்கத்திற்கு ஓடியிருப்பது அப்பட்டமான துரோகமாகும் என்று திமுக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் தவெக பக்கத்திற்குப் போக வேண்டும் என்ற முடிவை, தேர்தலுக்கு முன்னாடியே தைரியமாக எடுத்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு பெரிய அரசியல் குழப்பங்களும், ஏமாற்றுகளும் மிஞ்சியிருக்காது.
மறுபுறம், தவெக தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் களத்தின் போதே, “நிஜமான காங்கிரஸ் எங்கள் உடடன்தான் இருக்கிறது” என்று மிகத் துணிச்சலாக டிக்ளேர் பண்ணியபோதே, திராவிட கூட்டணியின் அஸ்திவாரத்தை ஆட்டம்காண வைப்பதில் அவரது முனைப்பு எந்த அளவுக்கு தீவிரமாக இருந்தது என்பது தெளிவாக புரிந்தது. திமுக என்ற பிரதான கட்சியை நேரடியாக தனிமைப்படுத்துவதை விட, அதை சுற்றிப் பலமாக அரணாக நின்றுகொண்டிருக்கும் கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக தட்டிப் பறித்து, அதன் மூலமாக திமுகவை அரசியல் ரீதியாக கட்டம்கட்டி வீழ்த்த வேண்டும் என்ற தவெகவின் உத்தி ஆரம்பத்திலிருந்தே மிகவும் கூர்மையாக செயல்பட்டு வந்துள்ளது.
முடிவாக, தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, வெறும் ‘அதிகார பசிக்காக’ தவெகவிற்குத் தாவிய காங்கிரஸும், விசிகவும் தங்களின் சுயரூபத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு கண்ணாடி பாத்திரம் உடைந்தால் எப்படி ஒட்ட வைக்க முடியாதோ, அதேபோல உடைந்த இந்த அரசியல் உறவுகளும் இனி ஒருபோதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறப்போவதில்லை. திமுகவை தனித்து விட வேண்டும் என்ற நோக்கில், தவெக விரித்த வலையில் விழுந்துள்ள இந்த கூட்டணிக் கட்சிகள், எதிர்காலத்தில் தங்களின் தனித்துவத்தை இழந்து தவெகவின் நிழலிலேயே முடங்க போவது முற்றிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.