அரை நூற்றாண்டுகால தமிழக அரசியல் மரபுகளை தவிடுபொடியாக்கி, 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு வரலாற்று புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், பதவியில் இருக்கும்போது மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு திமுகவிற்கு ஒருமுறை கூட கைவரவில்லை என்கிற கசப்பான நிதர்சனம், இம்முறை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் பொருந்தியுள்ளது. ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும்போதே தொடர் வெற்றியை பெற்று அதிகாரத்தை தக்கவைக்க முடியாமல் போன திமுகவின் அதே பழைய வரலாறு இம்முறையும் நிழலாய் வந்து தொடர்ந்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் செல்வி ஜெயலலிதாவிற்கு பிறகு, முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே ஒரு பொதுத்தேர்தலில் தோல்வியை சந்திக்கும் முதல் நபராக மு.க. ஸ்டாலின் மாறியுள்ளார். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்ப தொடங்கிவிட்டால், அது ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் தாண்டி எவ்வளவு சீற்றத்துடன் வெளிப்படும் என்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த சரிவு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் இருந்து பொதுவாழ்விற்கு வந்து, மிகக் குறுகிய காலத்திலேயே கோட்டையை கைப்பற்றிய பெருமை பொன்மன செம்மல் எம்.ஜி.ஆருக்கு பின் நடிகர் விஜய்க்கு மட்டுமே இப்போது கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் பல சினிமா நட்சத்திரங்கள் அரசியல் களம் கண்டிருந்தாலும், 1977-ல் எம்.ஜி.ஆர் நிகழ்த்திய அந்த அதிசய வெற்றியை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெய்ப்பித்து காட்டியுள்ளார் விஜய். மக்களின் இதயங்களில் ஒரு மாபெரும் நாயகனாக விஜய் ஆழமாக வேரூன்றி இருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
எம்.ஜி.ஆர் மற்றும் விஜய்யின் அரசியல் வெற்றிகளை ஒப்பிடும்போது, விஜய்யின் இந்த பயணம் கடும் சவால்கள் நிறைந்தது எனலாம். எம்.ஜி.ஆர் காலத்தில் அவருக்கு திமுக மட்டுமே நேரடி போட்டியாக இருந்தது. ஆனால், விஜய்யோ அசுர பலம் கொண்ட திமுக, நிலையான வாக்கு வங்கியுள்ள அதிமுக மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பலமிக்க பாஜக என மூன்று பெரும் முனைகளில் இருந்து வந்த எதிர்ப்புகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த மும்முனைத் தாக்குதல்களைத் தகர்த்து அவர் பெற்றிருக்கும் வெற்றி, அவரது அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாகும்.
சுருக்கமாகச் சொன்னால், 2026 தேர்தல் என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றமல்ல; இது தமிழக அரசியலின் அஸ்திவாரத்தையே மாற்றியமைத்த ஒரு நிலநடுக்கம். திமுகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளி, பாஜகவின் வியூகங்களையும் முறியடித்துள்ள விஜய்யின் இந்த ‘ஹாட்ரிக்’ வெற்றி, அவரை எம்.ஜி.ஆருக்குப் பின் தமிழகத்தின் புதிய சகாப்தமாக வரலாற்றில் பொறித்துள்ளது.