மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா தனது தோல்வியை ஒரு ‘தூதரக உடன்படிக்கை’ என்று கூறி மறைக்க முயல்வதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஈரானின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “உங்கள் தோல்வியை ஒப்பந்தம் என்று அழைக்காதீர்கள்” என்று அமெரிக்காவை சாடியுள்ளார். மேலும், இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது பழைய பொருளாதார நிலையை இனி ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்றும், எரிசக்தி மற்றும் எண்ணெய் விலைகள் பழைய நிலைக்கு திரும்பாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் “மிகவும் பயனுள்ள” பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அதன் காரணமாகவே ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தவிருந்த தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கு கீழ் குறைந்தது. ஆனால், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். நிதி சந்தைகளை கையாளுவதற்கும், போரில் சிக்கியுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தப்பிப்பதற்கும் பரப்பப்படும் போலிச் செய்தி இது என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்று திரள வேண்டும் என்று ஐஆர்ஜிசி செய்தி தொடர்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். வளைகுடா நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறும் அமெரிக்கா, உண்மையில் இஸ்ரேலுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது என்றும், பிராந்திய நாடுகளை தரம் தாழ்ந்தே நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நாடு உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு குண்டையாவது சுடுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக கருத வேண்டாம் என்று அண்டை நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் மறுத்தாலும், பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிற வளைகுடா நாடுகள் வழியாக இரு நாடுகளுக்கும் இடையே செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளார். இந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் பாகிஸ்தான் பிரதமருடன் பிராந்திய பாதுகாப்பு குறித்துத் தொலைபேசி வாயிலாக ஆலோசித்துள்ளார்.
மறுபுறம், ஈரானின் புரட்சிகர காவல்படை அமெரிக்க இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது. டிரம்பின் அறிக்கைகள் வெறும் உளவியல் போர் என்றும், அவை ஈரானின் ராணுவ வியூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் டிமோனா மற்றும் டெல் அவிவ் நகரங்கள் மற்றும் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்புடன் ஆலோசித்த பிறகு, லெபனான் மற்றும் ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி இன்னும் ஈரானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது தாக்குதல்களை நிறுத்தாதவரை இந்த நீர்வழி பாதை திறக்கப்படாது என்று ஈரான் பிடிவாதமாக உள்ளது. ஓமன் வெளியுறவு அமைச்சருடன் இது குறித்து ஆலோசித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, பிராந்திய விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஈரான் கடுமையாக எதிர்க்கும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.