தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-யின் அரசியல் அணுகுமுறை மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேர் விவகாரத்தில் அவர் செயல்பட்ட விதம் குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடியுள்ளார். விஜய்யின் அரசியல் முதல் அடியே பிழையாகிவிட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சினிமா டயலாக் வேண்டாம்:
“விஜய் பொதுவெளியில் மேடைகளில் சினிமா டயலாக் பேசுவது போல் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்,” என்று வைகோ வலியுறுத்தினார். பொறுப்புணர்ச்சி இல்லை, 41 பேர் மரணம் அடைந்த சம்பவத்தில் விஜய்யின் செயல்பாட்டில் கடுகளவும் பொறுப்புணர்ச்சி இல்லை என்று வைகோ குற்றம் சாட்டினார். “அவர் ஒருநாள் திருச்சியில் தங்கியிருந்து மறுநாள் காலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் இரவோடு இரவாக சென்னை பட்டணத்திற்குச் சென்றது ஏன்?” என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
தலைவனுக்கு அழகல்ல, “40 நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தன் இடத்திற்குக் வரவழைத்துத் துக்கம் விசாரிப்பது என்பது எந்தத் தலைவனும் செய்ய மாட்டான். துக்கம் கேட்க வேண்டும் என்றால் இறந்தோர் வீட்டுக்கு நாம் தான் செல்ல வேண்டும்,” என்று அவர் விஜய்யின் அணுகுமுறையைச் சாடினார்.
முதல் அடியே பிழை:
விஜய் அரசியல் களத்தில் எடுத்து வைத்திருக்கும் முதல் அடியே பிழையாகிவிட்டது என்றும், அரசியல் நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகத் தெரிவித்துள்ளார்.