பயத்தை காமிச்சிட்டியே பரமா? நீட் மறுதேர்வு வினாத்தாளும் லீக் என தகவல்.. போட்டி போட்டு அந்த வினாத்தாளை வாங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்பிய மாணவர்கள், பெற்றோர்கள்.. டாக்டருக்கு படிக்க போகும்போதே பிராடு செய்யும் இவர்கள், டாக்டருக்கு படித்தால் மக்களுக்கு சேவையா செய்வார்கள்? ஒழுக்கமா படிச்சு பாஸ் ஆகுங்கப்பா…

அகமதாபாத் சைபர் க்ரைம் போலீசாரால் அண்மையில் முறியடிக்கப்பட்டுள்ள நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு மோசடியானது, நாடு முழுவதும் போட்டி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் உலுக்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே தருவதாக கூறி டெலிகிராம் செயலியை முதன்மை ஆயுதமாக பயன்படுத்தி இந்த நெட்வொர்க் செயல்பட்டு வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை அகமதாபாத் சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களிடையே இருக்கும் தேர்வு பயம் மற்றும் பதற்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவர்களிடம் இல்லாத ஒரு பொருளை இருப்பதாக காட்டி பெரும் தொகையை சுருட்டியுள்ளது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த மோசடி நெட்வொர்க்கின் பின்னணியை ஆராய்ந்த சைபர் க்ரைம் போலீசார், இதன் செயல்பாட்டு முறையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நீட் தேர்வு மற்றும் அது சார்ந்த கல்வி அப்டேட்டுகள் வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல போலி டெலிகிராம் சேனல்களை உருவாக்கியுள்ளனர். அந்த சேனல்கள் மூலமாக, தங்களுக்கு நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் ரகசிய தகவல்களை அணுகும் அதிகாரம் இருப்பதாக பொய் விளம்பரங்களை செய்துள்ளனர். இதனை நம்பிய பெற்றோர்களும் மாணவர்களும், அவசர அவசரமாக கேட்கப்பட்ட தொகையை க்யூஆர் கோடுகள் , டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மற்றும் வங்கி கணக்குகள் மூலமாக அனுப்பியுள்ளனர்; பணத்தை பெற்றவுடன் மோசடிக்காரர்கள் தங்களின் தொடர்புகளை துண்டித்து மறைந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஐடிஐ பட்டதாரியான சுமேர் சிங் மீனா மற்றும் கோட்டாவை சேர்ந்த ஆகாஷ் மீனா ஆகிய இருவரைப் போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் “Raghav_singh_neet” என்ற டெலிகிராம் கணக்கையும், தேர்வு தொடர்பான பிற குழுக்களையும் இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது மொபைல் எண்கள், ஐபி முகவரிகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், இவர்கள் வெறும் தேர்வு வினாத்தாள் மோசடியோடு மட்டும் நின்றுவிடாமல் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரிலும் பல போலி சேனல்களை நடத்தி பொதுமக்களை ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், இந்த விசாரணையில் இந்த மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்சம் 12 சைபர் குற்றப் புகார்களுடன் இவர்களது ஆறு வங்கி கணக்குகள் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக பெறப்பட்ட இந்த மோசடி பணத்தை, அதன் பிறப்பிடத்தை மறைப்பதற்காக ஆன்லைன் கேமிங் கணக்குகள் மற்றும் பலதரப்பட்ட வங்கி வழிகள் மூலம் மாற்றி மாற்றி அனுப்பி, இறுதியில் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக பணமாக எடுத்து பயன்படுத்தியுள்ளனர் என்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இந்த நெட்வொர்க்குடன் தொடர்புடைய சுமார் 44 இணையதளங்களை சைபர் க்ரைம் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், இவை ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டவை ஆகும். ஒரே ஒரு மாதத்திற்குள் மட்டும் சுமார் 1,000 மொபைல் எண்கள் மற்றும் டெலிகிராம் தொடர்புகள் இந்த மோசடி கும்பலுடன் பேசியிருப்பது இந்த நெட்வொர்க்கின் பிரம்மாண்ட நீட்சியை உணர்த்துகிறது. இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உண்மையான நீட் வினாத்தாள்கள் எதுவுமே கைப்பற்றப்படவில்லை என்றும், முழுக்க முழுக்க பொய் வாக்குறுதிகளை மட்டுமே நம்பி இந்த ஏமாற்று வேலை அரங்கேறியுள்ளது என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை மற்றும் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில், மாணவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இத்தகைய என்க்ரிப்ட் செய்யப்பட்ட தளங்கள் மூலம் குறிவைப்பது அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அகமதாபாத் சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்களிலோ அல்லது டெலிகிராம் குரூப்களிலோ வரும் வினாத்தாள் விற்பனை, சீட் கேரண்டி போன்ற போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் செயல்பாடுகள் இருந்தால் உடனடியாக தேசிய சைபர் ஹெல்ப்லைன் எண் (1930) அல்லது சைபர் குற்றப் புகார்ப் பிரிவில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்

Leave a Comment