டெண்டர்னா அது நாங்க மட்டும்தான் எடுப்போம், கமிஷன் கொடுத்தாதான் வேலை நடக்கும்னு நினைச்சுட்டு இருந்தீங்களா?! அந்த கார்டெல் கூட்டணி காலமெல்லாம் இப்போ மலையேறிப்போச்சு! நீங்க காலம் காலமா ஆதிக்கம் செலுத்துன கோட்டையை உடைச்சு, கமிஷன் சிஸ்டத்தையே ஒழிக்கிறதுக்காகத்தான்டா நம்ம மந்திரி ஆனந்த் ஒரு அதிரடி சட்டத்தை கொண்டு வந்திருக்காரு! இனிமே உங்க தில்லுமுல்லு இங்க செல்லாது!

தமிழ்நாட்டில் அரசு டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், குறிப்பிட்ட சில குழுக்கள் மட்டுமே டெண்டர்களைக் கைப்பற்றும் முறையை உடைக்கவும், கமிஷன் முறையை ஒழிக்கவும் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் ஒப்பந்ததாரர்களுக்கான புதிய பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் 2026 என்ற புதிய கொள்கை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த புதிய விதிகள் அனைத்தும், கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இரண்டு அரசாணைகளுக்குப் பதிலாக இனிவரும் காலங்களில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளாகச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய விதிமுறைகளின்படி, வேலைவாயப்பில்லாத இளைஞர்கள், பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவைச் சேர்ந்த தனிநபர்கள் எவ்வித முன்னனுபவமும் இன்றி 10 லட்சம் ரூபாய் வரையிலான ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரடியாக எடுத்துச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பெறும் புதிய ஒப்பந்ததாரர்களுக்கு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்தும் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சலுகைகளைப் பெற விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பின்மை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த சான்றிதழை அவர்கள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் தவறாமல் புதுப்பிக்க வேண்டும் என்றும், இதற்கான குறைந்தபட்ச பதிவு வைப்புத்தொகை 20,000 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், ஒரே ஒப்பந்ததாரர் பல பணிகளைத் தன்னிச்சையாகக் குவித்து வைப்பதைத் தவிர்க்கவும், அரசு இப்புதிய விதிகளில் டெண்டர் மதிப்புக்கு 50 மடங்கு என்ற வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி, ஒரு ஒப்பந்ததாரர் 20,000 ரூபாயை வைப்புத்தொகையாகச் செலுத்தினால், அவர் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளை மட்டுமே எடுக்க முடியும். எவ்வளவு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்பதை ஒப்பந்ததாரரே முடிவு செய்து கொள்ளலாம் என்றாலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பணிகளை எடுக்க வேண்டுமானால் அதற்குத் தகுந்த முன்னனுபவமும், குறிப்பிட்ட அந்தப் பணிக்கான தொழில்நுட்ப நிபுணத்துவமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பரவிக் கிடக்கும் பெரிய ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில் மாவட்ட வாரியான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு ஒப்பந்ததாரர் தான் பதிவு செய்துள்ள சொந்த மாவட்டத்திலும், அதனைச் சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களிலும் மட்டுமே டெண்டர்களில் பங்கேற்க முடியும். தூரத்திலுள்ள மாவட்டங்களின் டெண்டர்களில் அவர்கள் பங்கேற்க முடியாது; உதாரணமாக, சென்னையில் உள்ள ஒரு ஒப்பந்ததாரர் அதன் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பங்கேற்கலாமே தவிர, கோயம்புத்தூரில் நடக்கும் டெண்டர்களில் பங்கேற்க இயலாது. இதே விதிமுறை கோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்களுக்கும் பொருந்தும் என்பதால், இதன் மூலம் மண்டல ரீதியாகச் செயல்படும் ஒப்பந்ததாரர்களின் கார்டெல் கூட்டமைப்புகள் முற்றிலும் உடைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவும் இந்த சீர்திருத்தம் வழிவகை செய்துள்ளது. விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் ஒப்பந்ததாரர்களை அதிகபட்சமாக 36 மாதங்கள் வரை கருப்புப் பட்டியலில் வைக்க புதிய விதிகள் உத்தரவிடுகின்றன. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவ்வாறு கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் ஒப்பந்ததாரர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வரும் வேறு எந்தவொரு புதிய திட்டப் பணிகளிலும் பங்கேற்க முடியாதவாறு முழுமையாகத் தடை செய்யப்படுவார்கள்.

அரசுப் பணிகளின் தரத்தை உறுதி செய்யவும், நிதிப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்தவும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டெண்டர் எடுக்கும் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் முறையான ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதோடு, தணிக்கை செய்யப்பட்ட நிதி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதும் இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிரடி மாற்றங்களின் மூலம், எளிய மற்றும் புதிய தொழில்முனைவோர் அரசுப் பணிகளில் எளிதாகப் பங்கேற்க முடிவதோடு, ஊழலற்ற மற்றும் வெளிப்படையான ஒரு டெண்டர் நடைமுறை தமிழ்நாட்டில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment