உழைத்தவர்களுக்கு அல்வா.. செட்டில் ஆனவர்களுக்கு பதவியா? தவெக கூடாரத்தை வெளுத்து வாங்கிய பி.டி. செல்வகுமார்!

”நடிகர் விஜய்க்காக ரத்தம் சிந்தி உழைத்த ரசிகர்களை ஓரம் தள்ளிவிட்டு, திடீரென உள்ளே வந்த பணக்காரர்களுக்கும், சதி செய்பவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது” என விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமார், தவெக-வின் தற்போதைய நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு ரகசியங்களை உடைத்துப் பேசியுள்ளார்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்:

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய்க்காகப் போஸ்டர் ஒட்டியவர்கள், கட்டவுட் கட்டியவர்கள், அரும்பாடுபட்டு உழைத்தவர்களுக்குத்தான் கட்சியில் பதவி வழங்கப்படும் எனப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொன்னார். ஆனால், இப்போது கட்சியில் யாராவது அப்படிப்பட்டவர்கள் பதவியில் இருக்கிறார்களா? விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவருக்காவது உருப்படியான பதவி வழங்கப்பட்டுள்ளதா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

ஆதவ் அர்ஜுனா குறித்த சர்ச்சை:

தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவை நேரடியாகச் சாடிய அவர், “திடீரென்று வந்த பணக்காரர்களுக்குப் பதவி கொடுக்கப்படுகிறது. லாட்டரி அதிபர் மார்ட்டின் சிறையில் இருந்தபோது, அவரது மகளை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டவர்தான் இந்த ஆதவ் அர்ஜுனா. இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கட்சிக்குள் முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது? இவரால் விஜய்க்கும், கட்சிக்கும் என்ன பயன்?” எனப் பரபரப்பைக் கிளப்பினார்.

நிர்வாகிகள் மீது சரமாரி தாக்குதல்:

தொடர்ந்து பேசிய செல்வகுமார், “புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், செங்கோட்டையன் போன்றவர்கள் விஜய்க்காகவோ அல்லது ரசிகர்களுக்காகவோ அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்கள்? விஜய்யைச் சுற்றி ஒரு சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது. அவருக்கு உண்மையாக இருந்தவர்களையும், ரசிகர்களையும் திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு, புதியவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். விஜய் உழைத்தவர்களின் அருமையை உணர வேண்டும்” என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலை நோக்கித் தயாராகி வரும் வேளையில், 27 ஆண்டுகளாக விஜய்யுடன் இருந்த பி.டி. செல்வகுமாரின் இந்தத் தாக்குதல், கட்சிக்குள்ளும் வெளியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment