தமிழக அரசியல் களம் எப்போதும் ஒரு தனி நபரை கூட்டாக எதிர்ப்பதை அந்த நபரின் பலமாகவே சித்தரித்து வந்துள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை பற்றிக் குறிப்பிடும்போது, “ஒருவரைப் பத்து பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால், அந்த ஒருவர்தான் பலசாலி” என்ற உதாரணத்தை சொன்னார். அந்த வார்த்தைகள் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு பொருந்துவதாக அவரது தொண்டர்கள் ஆவேசமாக முழங்கி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் ஆளுங்கட்சியான திமுக முதல் எதிர்க்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக மற்றும் விசிக, தேமுதிக, மதிமுக என பல முனை தாக்குதல்களை விஜய் எதிர்கொண்டு வருகிறார். ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்ட சில காலத்திலேயே இத்தனை பெரிய அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து அவரை தாக்குவது, அவர் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதையே காட்டுகிறது என்பது தவெகவினரின் வாதம்.
அரசியலில் ஒருவரை புறக்கணிக்க முடிந்தால் அவரை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும், ஒவ்வொரு அறிக்கையையும் அனைத்து கட்சிகளும் கூர்ந்து கவனித்து, அதற்கு எதிர்வினையாற்றுவது அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பறைசாற்றுகிறது. குறிப்பாக, பாரம்பரிய அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கை பிடிப்புகளை தாண்டி, விஜய்யின் வருகையை பற்றி பேசுவது தமிழக அரசியலில் ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் ‘திராவிட மாடல்’ முதல் பாஜகவின் ‘ஆன்மீக அரசியல்’ வரை அனைத்து தரப்பினரும் விஜய்யை ஒரு சவாலாகவே பார்க்கின்றனர். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விஜய் மிகவும் நிதானமாகவும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் களத்தில் நிற்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.
ஒருவரை பலமுனை தாக்குதல்கள் சூழ்ந்து கொள்ளும்போது அவர் சோர்ந்து போவார் என்று எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், விஜய்யின் விஷயத்தில் இது தலைகீழாக நடக்கிறது. “எவ்வளவு தூரம் அழுத்தம் கொடுக்கிறார்களோ, அவ்வளவு தூரம் அவர் மக்களிடையே அனுதாபத்தையும் ஆதரவையும் பெறுகிறார்” என்பதே தற்போதைய கள நிலவரம்.
தமிழக அரசியல் வரலாற்றில் பல புதிய கட்சிகள் வந்திருக்கின்றன, மறைந்திருக்கின்றன. ஆனால், தொடக்கத்திலேயே இத்தனை பெரிய ‘அரசியல் முற்றுகையை’ எதிர்கொண்ட தலைவர்கள் மிகச் சிலரே. விஜயகாந்த் தொடக்க காலத்தில் சந்தித்த அதே போன்றதொரு நெருக்கடியை இன்று விஜய் எதிர்கொள்கிறார். ஆனால், விஜய்யின் பலம் என்பது அவரிடம் உள்ள இளைஞர் பட்டாளமும், அமைதியான வியூகமும்தான்.
மொத்தத்திக்ல் அரசியலில் விமர்சனங்கள் என்பவை ஒரு தலைவரை செதுக்கும் உளி போன்றது. அனைத்து திசைகளிலிருந்தும் வரும் இந்த தாக்குதல்களை தன் வசமாக்கிக் கொண்டு, விஜய் எப்படித் தனது பயணத்தைத் தொடரப் போகிறார் என்பதே 2026 தேர்தலின் மிக முக்கியத் திருப்புமுனையாக இருக்கும்.