ஈரான் தனது ஏவுகணை திறனை உலக நாடுகள் எதிர்பார்த்த 2,000 கிலோமீட்டர் எல்லையை தாண்டி, சுமார் 4,000 கிலோமீட்டர் வரை நீட்டித்துள்ளது சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுத் தளமான டியாகோ கார்சியாவை ஈரான் இலக்கு வைத்ததன் மூலம், அதன் தாக்குதல் எல்லை ஒரே இரவில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக இஸ்ரேலிய வான் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ரான் கோச்சவ் தெரிவித்துள்ளார். விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப பயன்படுத்தப்படும் ‘மல்டி-ஸ்டேஜ்’ ஏவுகணை தொழில்நுட்பத்தை ஈரான் பல ஆண்டுகளாக ரகசியமாக மேம்படுத்தி வந்ததே இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் ஏவுதல் என்ற பெயரில் ஈரான் முன்னெடுத்து வரும் சோதனைகள், உண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பதற்கான மறைமுக திட்டத்தின் ஒரு பகுதியே என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. தற்போது நிகழ்த்தப்பட்டுள்ள 4,000 கி.மீ பாய்ச்சல், ஈரானின் அந்த ரகசிய திட்டத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சோவியத் காலத்து R-27 வகை ஏவுகணைகளை நிலத்திலிருந்து ஏவும் வகையில் ஈரான் மாற்றியமைத்திருக்கலாம் அல்லது அதன் சொந்த தயாரிப்பான Khorramshahr-4 ஏவுகணையின் எடையை குறைத்து அதன் இலக்கை அதிகரித்திருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஈரானின் இந்த ஏவுகணை எல்லை விரிவாக்கத்தால் லண்டன், பாரிஸ், பெர்லின் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களும் இப்போது ஈரானின் தாக்குதல் வரம்பிற்குள் வந்துவிட்டன. இனி மத்திய கிழக்கு நாடுகளுடனான மோதல் என்பது அந்த பகுதியுடன் மட்டும் முடிந்துவிடப் போவதில்லை என்றும், ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தலை தங்களுக்கு நேரடியான ஆபத்தாக கருத வேண்டும் என்றும் கோச்சவ் எச்சரித்துள்ளார். ஏவுகணைகள் வளிமண்டலத்திற்கு வெளியே சென்று எந்த திசையிலிருந்தும் தாக்கும் வல்லமை கொண்டவை என்பதால், இனி திசையை வைத்து பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது.
பிரிட்டன் போன்ற நாடுகள் அதிநவீன கடற்படை பாதுகாப்பு வசதிகளை கொண்டிருந்தாலும், வளிமண்டலத்திற்கு வெளியே வைத்து ஏவுகணைகளை தடுக்கும் ‘ஏரோ-3’ போன்ற தரைவழி பாதுகாப்பு அமைப்புகள் அவர்களிடம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. அதே நேரத்தில், ஈரான் தனது ஏவுகணை திறனை 10,000 கிலோமீட்டர் வரை நீட்டிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஒருவேளை இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அமெரிக்காவை தாக்கும் அளவுக்கு தூரத்தை அதிகரிப்பது ஈரானுக்குப் பெரிய கடினமாக இருக்காது என்றும் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
இஸ்ரேலின் உளவுத்துறை மிக தீவிரமாக ஈரானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை கண்காணித்து வந்த போதிலும், இந்த 4,000 கி.மீ திறன் கொண்ட ஏவுகணையை தவறவிட்டது ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஈரானின் பல ஏவுகணை தளங்களை இஸ்ரேல் தாக்கி அழித்திருந்தும், ஈரான் தனது ஒரு குறிப்பிட்ட ஏவுகணை தொழில்நுட்பத்தை மிகவும் ரகசியமாக மறைத்து வைத்து சாதித்துள்ளது. ஈரானின் இந்த திடீர் ராணுவ பாய்ச்சல், உலக நாடுகளின் பாதுகாப்பு வியூகங்களை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளது.
மொத்தத்தில் ஈரான் ஒரு வலிமையான ஏவுகணை சக்தியாக உருவெடுத்துள்ளது எதார்த்தமான உண்மையாகிவிட்டது. விண்வெளி தொழில்நுட்பம் என்ற போர்வையில் அது வளர்த்தெடுத்த ராணுவ வலிமை, இப்போது உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வரும் காலங்களில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தையும் இந்த ஏவுகணை தொழில்நுட்பத்துடன் இணைத்தால், அது உலக அமைதிக்கே பெரும் சவாலாக அமையும். இனிவரும் நாட்கள் இந்தத் தொழில்நுட்ப போட்டியில் வல்லரசு நாடுகள் தங்களை தற்காத்துக் கொள்ள மேற்கொள்ளும் புதிய முயற்சிகளையே சார்ந்திருக்கும்.