தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அரசியலில் பெரும் திருப்புமுனை காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தவழும் குழந்தைகள் பெரியவர்களாவார்கள்:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சி என்றும், அதற்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்றும் எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் ஒரு தத்துவார்த்தமான பதிலை அளித்தார். “தவழும் குழந்தைகள் தான் காலப்போக்கில் பெரியவர்களாவார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகுதான் தன்னாட்சி நடத்துவார்கள். அதுபோலத்தான் தமிழக வெற்றிக் கழகமும் தற்போது வளர்ந்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவே தீர்ப்பளிக்கும்:
“நாங்கள் அரசியல் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது குறித்து வரும் தேர்தல் முடிவுகள்தான் இறுதித் தீர்ப்பளிக்கும். மற்றவர்களின் விமர்சனங்களுக்கு இப்போது பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என்று கூறிய அவர், கட்சியின் பலத்தை வாக்குகளின் மூலம் நிரூபிப்போம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பொங்கலுக்குப் பின் திருப்புமுனை:
தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், “உங்கள் (விமர்சகர்களின்) காலம் முடிந்ததற்குப் பிறகு, எங்களுடைய திருப்புமுனையைப் பார்த்து நாடே வியக்கும். குறிப்பாகப் பொங்கலுக்குப் பிறகு தமிழக அரசியலில் நாங்கள் ஏற்படுத்தப்போகும் மாற்றம் மிகப்பெரியதாக இருக்கும்,” என அதிரடியாகத் தெரிவித்தார்.
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது கொங்கு மண்டலத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.