அப்பாவுக்காக கொளத்தூரில் கூட வாக்கு கேட்டு வராத செந்தாமரை, வில்லிவாக்கம் தொகுதிக்கு மட்டும் வந்தது ஏன்? திமுக நிர்வாகிகள் ஆச்சரியம்.. சபரீசன் நேரடி கட்டுப்பாட்டில் வில்லிவாக்கம்.. கார்த்திக் மோகனை ஜெயிக்க வைத்தே ஆக வேண்டும் என சூளுரையா?

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், சென்னை மண்டலத்தின் தொகுதி பங்கீடுகளும், வேட்பாளர் மாற்றங்களும் ஆளுங்கட்சியான திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, அண்ணாநகர் தொகுதியை தன் கோட்டையாக கருதி கடந்த சில மாதங்களாக தீவிரத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த கார்த்திக் மோகனுக்கு, திமுக தலைமை கடைசி நேரத்தில் வில்லிவாக்கம் தொகுதியை ஒதுக்கியது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. விஜய்க்கு அடுத்த நிலையில் செல்வாக்காக உள்ள ஆதவ் அர்ஜூனனுடன் மோதும் கார்த்திக் மோகன், அண்ணாநகரில் வெற்றியை உறுதி செய்திருந்த நிலையில், திடீரென புதிய களத்திற்கு மாற்றப்பட்டது அவருக்கும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு ‘ஷாக்கிங்’ செய்தியாகவே பார்க்கப்பட்டது.

வில்லிவாக்கம் தொகுதிக்குள் கார்த்திக் மோகன் நுழைந்தபோது, ஏற்கனவே அந்த தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த உள்ளூர் திமுக நிர்வாகிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. “லோக்கல்” பிரமுகர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், வெளியிலிருந்து ஒரு வேட்பாளர் திணிக்கப்படுவதாக உடன்பிறப்புகள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தி நிலவியது. இதனால், கார்த்திக் மோகன் தொகுதிக்குள் பிரச்சாரத்திற்கு செல்லும் முன்பே, அவருக்கு எதிரான களம் சூடாகியிருந்தது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சேகர் பாபு கார்த்திக் மோகனுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், அடிமட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்தது கார்த்திக்கிற்கு பெரும் சவாலாக அமைந்தது.

இந்த சிக்கலான சூழலை அறிந்த முதல்வரின் மருமகன் சபரீசன், நிலைமையை சரிசெய்ய நேரடியாக களத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது. தனது மனைவி செந்தாமரையுடன் வில்லிவாக்கம் தொகுதிக்குள் சென்ற அவர், அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தனது தந்தை மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கூட நேரடியாக பிரச்சாரம் செய்யாத செந்தாமரை, தனது குடும்ப நண்பரான கார்த்திக் மோகனுக்காக வில்லிவாக்கம் வந்து ஆதரவு கோரியது கட்சியினரிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

செந்தாமரை மற்றும் சபரீசன் ஆகியோரின் நேரடி தலையீடு, வில்லிவாக்கம் திமுக நிர்வாகிகளிடையே நிலவிய மந்த நிலையை அப்படியே மாற்றியமைத்துள்ளதாகவும், முதல்வரின் குடும்பமே கார்த்திக் மோகனுக்காக களமிறங்கிய பிறகு, அமைச்சர் சேகர் பாபு தொடங்கி உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாளம் வரை அனைவரும் இப்போது தேர்தல் பணியில் வேகம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் அதிருப்தியாளர்கள் முழு அளவில் திருப்தியடையவில்லை என கூறப்படுகிறது,.

Leave a Comment