காசு குடுத்து தியேட்டர்ல பாக்குற படத்துக்கே நூறு கண்டிஷன் போடுறீங்களே… 24 மணி நேரமும் சின்ன பசங்க கையில இருக்குற யூடியூப்க்கு ஏன் இன்னும் கடிவாளம் போடாம வச்சிருக்கீங்க? வியூஸுக்காகவும் காசுக்காகவும் எதை வேணாலும் போடலாம்னு நினைச்சா… சீக்கிரமே உங்க ‘சேனலுக்கு’ எண்ட் கார்டு போடுற காலம் வரும்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் அதிவேக இணையத்தின் பயன்பாடு உலக அளவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கும், பொழுதுபோக்கிற்கும் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களை விடவும் சமூக வலைத்தளங்களே பிரதானமாக விளங்குகின்றன. இத்தகைய சூழலில், கடந்த சில ஆண்டுகளாக யூடியூப் தளம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பலர் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிவேகமாகத் தங்களை முன்னிறுத்திப் பிரபலங்களாகவும் மாற்றி வருகின்றனர். இருப்பினும், இந்த யூடியூப் தளத்தில் அத்துமீறும் வகையில் வெளியாகும் சில தவறான பதிவுகளுக்கு எப்போது கடிவாளம் போடப்படும் என்ற ஒரு நியாயமான கேள்வி தற்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிக வலுவாக எழுந்துள்ளது.

சினிமாவில் வன்முறை, ஆபாசக் காட்சிகள் போன்றவற்றைத் தணிக்கை செய்வதற்குத் தனித்தனியே தணிக்கைத் துறைகள் இயங்கி வருகின்றன. ஆனால், திரையரங்கு வரை சென்று பணம் கொடுத்துப் பார்க்கும் திரைப்படத்திற்கு இருக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள், அனைவரின் கையிலும் 24 மணி நேரமும் பயன்பாட்டில் உள்ள யூடியூப் தளத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பது பெரும் கவலையை அளிக்கிறது. யூடியூபில் சில நல்ல விஷயங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தாலும், அதனைத் தாண்டிப் பெரும்பாலான பதிவுகள் எவ்விதத் தரக்கட்டுப்பாடும் இன்றி வெளியாகின்றன. இதன் காரணமாக ஆபாச மற்றும் வன்முறை உள்ளிட்ட சமூகச் சீர்கேடு விளைவிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவை எளிதாகப் பரவி வருகின்றன. எனவே, சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த யூடியூப் தளத்தில் வீடியோக்களைப் பதிவிடக் கடுமையான கட்டுப்பாடுகளும் தணிக்கை முறையும் அவசியம் தேவை என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை இணைய தளங்களிலேயே செலவிடுகின்றனர். பள்ளிப் பாடத்திட்டங்களைப் படிக்கவும், ஆசிரியர்கள் மற்றும் பிற குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், பரஸ்பர செயல்பாட்டுடன் கல்வி விளையாட்டு மற்றும் வீடியோக்களைப் பார்க்கவும் யூடியூப் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகையதொரு இக்கட்டான நிலையில், யூடியூப் தளங்களில் சமீப காலமாக வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் நிரம்பியுள்ளன. இவற்றைத் தொடர்ச்சியாகப் பார்க்கும் சிறுவர்கள், மிக இளம் வயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டப்படுகிறார்கள். இதேபோல், பிச்சைக்காரர்கள் அல்லது முதியவர்கள் போன்ற ஏழைப் பாலோவர்களை வைத்துக்கொண்டு, அவர்கள் பலவீனமாக இருக்கும் நிலையைப் பயன்படுத்தித் தங்களது சுய லாபத்திற்காக வீடியோக்களை வெளியிட்டு, அதை விளம்பரப்படுத்திப் பணம் சம்பாதிக்கும் போக்கும் பரவலாக அதிகரித்து வருகிறது.

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குறிப்பாகச் சிறுவர்களும் சமூக வலைத்தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களது படிப்பு மற்றும் இதர செயல்பாடுகளுக்குப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பெற்றோர் தரப்பில் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாகக் குழந்தைகளின் செயல் என்பது அவர்களின் பெற்றோரைப் பொறுத்தது என்பதால், அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்களின் செய்கைகளையே ஒத்துள்ளன. எனவே, குழந்தைகள் செல்போன் அதிகளவில் பயன்படுத்துவதைத் தடுத்து, கார்ட்டூன்கள் அல்லது ரீல்ஸ் போன்றவற்றைத் தேவையற்ற முறையில் பார்ப்பதை முழுமையாகக் குறைக்க வேண்டும். இன்று சிறிய வயதிலேயே குழந்தைகளுக்குச் செல்போன்களை வாங்கிக் கொடுத்து, அதன் மூலமாக அவர்களைத் தூங்க வைப்பது அல்லது சாப்பாடு ஊட்டுவது போன்ற செய்கைகளால் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் உலாவி வரும் வீடியோக்களின் மாய வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் தங்களது கடைகளில் உணவுப் பாதுகாப்பைத் துறை ரீதியாக உறுதி செய்யும் பொருட்டும், உணவு பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய புதிய அறிவுரையை அண்மையில் வழங்கியுள்ளது. அதன்படி, எந்தவொரு ஹோட்டல் அல்லது உணவகத்தில் ஃபுட் ரிவ்யூ செய்வதற்கு முன்பாக, அந்தக் குறிப்பிட்ட கடையில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் உள்ளதா, முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கடையில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் முதல் உணவு தயாரிப்பாளர்கள் வரை முறையாகக் கையுறை மற்றும் தலையுறை உள்ளிட்ட அனைத்தையும் அணிந்து பணியாற்றுகிறார்களா என்பதை ஆராய்ந்து, கடைகளில் முறையான சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்த பின்னரே யூடியூபர்கள் தங்களது ரிவ்யூ வீடியோக்களை வெளியிட வேண்டும் என்ற நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் வாயிலாகச் சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும் வகையிலான ஊடகத் தன்மையைப் பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உண்மையாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், போலிச் செய்திகள் மற்றும் தனிநபர் அவதூறுகளைத் தூண்டும் பதிவுகள் மிக வேகமாகப் பதியப்பட்டு வருகின்றன. இவை சமூக அமைதியையும் தனிநபர் உரிமைகளையும் கெடுப்பதாக உள்ளன. எனவே, பணத்தைப் பறிப்பதற்கும் அதிகாரிகளை மிரட்டுவதற்கும் சிலர் யூடியூப் தளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற யூடியூபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இத்தகைய யூடியூபர்கள் ஒரு கருத்தை வெளியிடும் போது, அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து, சட்டம் மற்றும் நெறிமுறைகளை முறைப்படுத்தக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

Leave a Comment