பேசும்போது ஒழுங்கா பேசினா, எதுக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்க போகிறேன்.. சங்கி அமைச்சருன்னு பேசக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா? பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்த எதிர்க்கட்சி தலைவர்ன்னு பேசக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?

பேசும்போது ஒழுங்கா பேசினா, எதுக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்க போகிறேன்.. சங்கி அமைச்சருன்னு பேசக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா? பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்த எதிர்க்கட்சி தலைவர்ன்னு பேசக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா? சட்டசபையை கோடிக்கணக்கான மக்கள் பாக்குறாங்கன்னு ஒரு பயத்தோட பேசுங்க.. கண்ணியமா பேசுனா நானும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க மாட்டேன்.. உங்க மரியாதையும் தப்பிக்கும்.. சட்டமன்றத்தில் சாட்டையடி பதில் கொடுத்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்…

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் விதம், அவைக்குறிப்பின் கண்ணியம் மற்றும் ‘Mention’ நடைமுறை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விரிவாக எடுத்துரைத்தார். அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு ஒரு கருத்தை உறுப்பினர்கள் ஏன் பேச வேண்டும் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் சட்டமன்ற நடைமுறைகள் குறித்து பேசப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் உறுப்பினர்கள் தங்களது பேச்சை கட்டுப்படுத்தி, முறைப்படுத்தி, நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அவையில் பேசப்படும் சில கருத்துகள் பின்னர் மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் பரவுவது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். சட்டப்பேரவையின் மாண்பு, கௌரவம் மட்டுமல்லாமல், உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களின் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். விதிமுறைகள், மரபுகள், பாரம்பரியம் ஆகியவற்றை மதிப்பதோடு, அவையின் கண்ணியத்தை பாதிக்கும் செயல்கள் நடைபெறாத வகையில் உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தன்னை சந்தித்து பேசியதையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியலுடன் நேரடி தொடர்பு இல்லாத தங்களுக்கு சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு அரசியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக பிரபாகர் கூறினார். “எங்கள் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை; நாமும் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது?” என்ற எண்ணம் இளைஞர்களிடம் உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்கள் கவனிக்கும் நிலை உருவாகியுள்ளது என அவர் விளக்கினார். உறுப்பினர்கள் பேசும்போதே தங்கள் கருத்துகளின் தாக்கத்தை உணர்ந்து செயல்பட்டால், அவைக்குறிப்பிலிருந்து கருத்துகளை நீக்கும் பிரச்சனையே ஏற்படாது என்றும் கூறினார். அதேநேரத்தில், அவையின் மாண்பை குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பாடுகள் நடந்தால், அதுகுறித்து மக்கள் கேள்வி எழுப்புவதும் இயல்புதான் என அவர் குறிப்பிட்டார்.

‘Mention’ நடைமுறை குறித்தும் சபாநாயகர் முக்கிய விளக்கத்தை அளித்தார். ஒரு தொகுதியில் உள்ள பிரச்சனையை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ‘Mention’ செய்ய அனுமதிக்கலாம் என்றாலும், கேள்வி நேரமும் கவன ஈர்ப்பு தீர்மானங்களும் நடைபெறும் சூழலில் அனைவருக்கும் தன்னிச்சையாக அந்த வாய்ப்பை வழங்க முடியாது என்றார். குறிப்பாக அமைச்சர் உடனடியாக பதில் அளிக்காத ஒரு தருணத்தை வைத்து, “எம்.எல்.ஏ. நன்றாக கேள்வி கேட்டார்; அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்தார்” என்ற தவறான எண்ணம் மக்களிடம் உருவாகக்கூடாது என்றும் அவர் விளக்கினார்.

இதையடுத்து, காலையில் 9 மணிக்கு வழங்கப்படும் மனுக்களில் சபாநாயகர் அனுமதிக்கும் விவகாரங்களை மட்டுமே ‘Mention’ செய்ய அனுமதிக்க முடியும் என அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் உரிய பதில்களை வேகமாக வழங்கும் வகையில் அரசு தரப்புடன் ஆலோசித்து, கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு உடனடி பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்காலத்தில் கூடுதல் விவகாரங்களை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு குறித்து முடிவு செய்யலாம் என்றும் கூறினார். இதன் மூலம் சட்டப்பேரவையின் நேரம், நடைமுறை, கண்ணியம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துவதே தனது நோக்கம் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Comment