ஆன்லைன் தகவல்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்கு உதாரணமாக, மதுரையில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் என்ன?
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி (19). இவர் அங்குள்ள ஒரு பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கலையரசி தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். இதற்காக, ‘இணைவோம் இயற்கையுடன்’ என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோவைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
அதில் உடல் எடையை வேகமாக குறைக்க ‘வெங்காரம்’ (Borax) என்ற வேதிப்பொருள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை நம்பி, கலையரசி நாட்டு மருந்துக் கடையில் இருந்து அதனை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்.
துடிதுடித்த மாணவி:
குங்குமம் தயாரிப்பதற்கும், மெருகூட்டுவதற்கும் பயன்படும் இந்த வெங்காரத்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே கலையரசிக்குக் கடுமையான வாந்தியும், ரத்தப்போக்குடன் கூடிய வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி மரணம்:
மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வேதிப்பொருள் அவரது உடல் உறுப்புகளைக் கடுமையாகப் பாதித்ததால் சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர்கள் எச்சரிக்கை:
“சிறுநீரகக் கோளாறு முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தக்கூடிய வீரியம் மிக்க வேதிப்பொருள் வெங்காரம். இதனை உட்கொள்வது தற்கொலைக்குச் சமம்” என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மக்களுக்கான வேண்டுகோள்:
*யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ‘வீட்டு வைத்தியம்’ மற்றும் ‘டயட்’ டிப்ஸ்களை மருத்துவர் ஆலோசனையின்றிப் பின்பற்ற வேண்டாம்.
*அங்கீகரிக்கப்படாத நபர்கள் சொல்லும் மருத்துவக் குறிப்புகள் உயிருக்கே உலையாக முடிந்துவிடும்.
*ஒரு சின்ன ஆசைக்காகத் தவறான வழியைப் பின்பற்றி, வளரும் வயதில் ஒரு மாணவி உயிரை விட்டிருப்பது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.