தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழலில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனும் அரசியல் விமர்சகருமான சூர்யா சிவா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி முயற்சிகள் குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.
நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்களாக கருதப்படும் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய இருவரின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக பேசியுள்ளார். இவர்கள் இருவரும் விஜய்யின் அரசியல் நகர்வுகளில் முக்கிய மூளையாக செயல்படுவதாகவும், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த காரணத்தை கொண்டும் கூட்டணி அமைக்க கூடாது என்பதில் மிக உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் சூர்யா சிவா தெரிவித்துள்ளார். பிஜேபி எதிர்ப்பு அலையைத் தமிழகத்தில் அறுவடை செய்ய வேண்டுமானால், தேசிய அளவில் காங்கிரஸுடன் இணக்கமாக இருப்பதே சரியான வியூகம் என்று இவர்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், டெல்லி பாஜக மேலிடத்தை சந்தித்து பேசுவதற்குத் தனக்கு மிகவும் நம்பிக்கையான ஒரு நபரை தூதராக அனுப்ப வேண்டிய தேவை விஜய்க்கு ஏற்பட்டது. இதற்காக அவர் நடிகை திரிஷாவை தேர்ந்தெடுத்ததாக சூர்யா சிவா ஒரு அதிரடியான தகவலை பகிர்ந்துள்ளார். திரிஷா டெல்லிக்கு சென்றபோதுதான் அங்குள்ள முக்கிய பாஜக புள்ளிகளுடன் கூட்டணி தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்தேறியதாகவும், அவர் அந்த நேர்காணலில் புகழ்ந்துரைத்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழகத்தின் பெரும் தலைவர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர் தனக்க் மிகவும் நெருக்கமான மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஜெயலலிதாவை டெல்லிக்கு தூதராக அனுப்பித் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய வரலாற்றை சூர்யா சிவா இங்கே நினைவு கூர்ந்துள்ளார். அதே பாணியை தற்போது விஜய்யும் கையில் எடுத்துள்ளதாகவும், திரிஷாவை தூதராக அனுப்பியதன் மூலம் தனது அரசியல் இலக்கை நோக்கி அவர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகவும் அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். சினிமா பிரபலங்கள் அரசியலில் ஒரு பாலமாக செயல்படுவது தமிழகத்திற்கு புதிதல்ல என்றாலும், தற்போதைய சூழலில் திரிஷாவின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சூர்யா சிவாவின் இந்த கூற்று உண்மையா? அல்லது அவரது கற்பனையா? என்பது தெரியவில்லை. கொள்கை எதிரி என விஜய் பாஜகவை அறிவித்துவிட்ட பின்னர் பாஜகவுடன் கூட்டணிக்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பாரா? அல்லது அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத திரிஷாவை அனுப்பியிருப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், திருச்சி சூர்யா சிவாவின் இந்த பேட்டி ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் திரிஷாவின் டெல்லி பயணம் என தவெகவின் ரகசிய அரசியல் வியூகங்களை வெளிப்படுத்தினாலும் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..