“மிஷன் ஆரம்பமாகிவிட்டது!” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு, இப்போது உலக நாடுகளைப் போர் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்கா தனது மாபெரும் கடற்படையை (Massive Armada) ஏவியுள்ளது.
வெனிசுலாவை விடப் பெரிய படை!
சமீபத்தில் வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியை அதிரடியாக அகற்றிய அதே பாணியில், இப்போது ஈரானை அமெரிக்கா குறிவைத்துள்ளது. இது குறித்துப் பேசிய டிரம்ப், “வெனிசுலாவுக்கு அனுப்பியதை விடப் பெரிய கடற்படை இப்போது ஈரானை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர் கப்பல் தலைமையில் இந்தப்படை மிக வேகமாக முன்னேறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வன்முறைக்கும் தயார்.. அடி தாங்க மாட்டீங்க!
பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் ஈரானுக்கு டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை மிகவும் காட்டமாக உள்ளது.
“நேரம் முடிந்து கொண்டிருக்கிறது! ஒழுங்காகப் பேச்சுவார்த்தைக்கு வந்து ஒரு நியாயமான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள். எங்கள் கடற்படை இந்த மிஷனை மிக விரைவாகவும், தேவைப்பட்டால் வன்முறையுடனும் நிறைவேற்றும்.”

“முன்பு ஒருமுறை ‘மிட்நைட் ஹேமர்’ (Midnight Hammer) மூலம் உங்களுக்குப் பாடம் புகட்டினோம். ஆனால், அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் அதை விடப் பல மடங்கு மோசமானதாக இருக்கும்!” என்று டிரம்ப் மிரட்டியுள்ளார்.
பதிலடி கொடுக்கத் துடிக்கும் ஈரான்!
டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் சளைக்காமல் பதிலடி கொடுத்துள்ளது. “எங்கள் விரல்கள் எப்போதும் துப்பாக்கி விசையிலேயே (Finger on the trigger) இருக்கின்றன. அமெரிக்கா ஒரு அங்குலம் அத்துமீறினாலும் அதன் விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும்” என்று ஈரானின் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
ஈரானில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு நடுவே, அமெரிக்காவின் இந்த மிரட்டல் மத்திய கிழக்கில் ஒரு பெரும் போரை மூட்டிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.