அண்ணாமலை கம்முனு இருந்திருக்கலாம்! – விஜய்க்கு பாடம் எடுத்த பாஜக-விற்கு தவெக காரசார பதிலடி!

”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எப்போது பேச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும், அவருக்கு அண்ணாமலை பாடம் எடுக்கத் தேவையில்லை” என்று தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அண்ணாமலை, விஜய் அரசியல் விவகாரங்களில் மௌனம் காப்பதாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அருண்ராஜ் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மத நல்லிணக்கத்தின் பூமி தமிழ்நாடு:

“தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழும் மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இதுதான் நிலைமை. மதுரை கள்ளழகர் திருவிழாவில் அழகர் ஊர்வலம் வரும்போது இஸ்லாமியச் சகோதரர்கள் அதனை வழிபடுகின்றனர். அதேபோல், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதிக்குச் செல்கின்றனர். இதுதான் உண்மையான தமிழ்நாடு. இதில் ஆதாயம் தேட பாஜகவும், திமுகவும் முயல்கின்றன. திருப்பரங்குன்றம் விவகாரம் ஒரு தேவையற்ற பிரச்சினை.”

அண்ணாமலைக்கு ‘விஜய்’ பாணியில் பதிலடி :

விஜய்யின் மௌனம் குறித்து அண்ணாமலை பேசியதற்குப் பதிலளித்த அருண்ராஜ்,

“எங்கள் தலைவர் விஜய் சொன்ன டயலாக் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, அண்ணாமலைக்குத் தான் நூறு சதவீதம் பொருந்தும். அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், அவர் இருக்க வேண்டிய இடத்தில் (மத்திய அரசியல் அல்லது மாநிலத் தலைவர் பதவி) தொடர்ந்து இருந்திருக்கலாம். ஆனால் அவர் பேசக் கூடாத இடத்தில் பேசியதால்தான் இன்று இந்த நிலைமை.”

தலைவருக்குத் தெரியும் எப்போது பேச வேண்டும் என்று:

மேலும் பேசிய அவர், “எங்கள் கட்சித் தலைவர் எப்பொழுது எதைப் பேச வேண்டும் என்று அண்ணாமலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. தலைவருக்கு எல்லாமே தெரியும். சரியான நேரத்தில் அவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்வார். அண்ணாமலைக்குத் தெரிந்த அரசியலை விட, மக்களுக்கு என்ன தேவை என்பது எங்கள் தலைவருக்கு நன்றாகத் தெரியும்” என்று உறுதிபடக் கூறினார்.

அண்ணாமலையின் விமர்சனத்திற்குத் தவெக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த அதிரடி பதில், தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment