ஈரோட்டில் விஜய்யின் அரசியல் ஆட்டம்.. செங்கோட்டையனின் ‘மாஸ்டர் பிளான்’ சக்சஸ் ஆகுமா?

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாளை (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் நடைபெறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்குப் பிறகு, சுமார் 83 நாட்கள் இடைவெளி விட்டு விஜய் பங்கேற்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது.

செங்கோட்டையனின் ‘மாஸ்டர் பிளான்’ :

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெக-வில் இணைந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையனுக்கு இது கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. தனது சொந்த மண்ணில் நடைபெறும் இந்தக் கூட்டத்தை எவ்வித சலசலப்பும் இன்றி நடத்த அவர் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளார்.

“எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து மாநாடுகளை எப்படி ஒருங்கிணைத்தோமோ, அதே அனுபவத்தைப் பயன்படுத்தி தம்பி விஜய்க்கான இந்த கூட்டத்தை வெற்றிகரமாக முடிப்பேன்” என அவர் சூளுரைத்துள்ளார். பாதுகாப்பு கருதி மேடை மற்றும் பேனர்களைச் சுற்றி முள்வேலி அமைப்பது, 12 ஆம்புலன்ஸ்கள், குடிநீர் வசதி எனப் பக்கா ஏற்பாடுகளை அவர் செய்துள்ளார்.

கியூ-ஆர் கோட், பாஸ் அவசியமில்லை :

முன்னதாகக் கூட்டத்திற்கு வர விரும்புவோருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனப் பேசப்பட்ட நிலையில், செங்கோட்டையன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் கியூ-ஆர் கோட் (QR Code) அல்லது சிறப்பு பாஸ் (Pass) எதுவும் தேவையில்லை. அனைவரும் தாராளமாக வரலாம்.”

இந்த அறிவிப்பு இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஈரோடு :

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கொங்கு மண்டலத்தில் விஜய் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஈரோடு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தால், அது அடுத்தடுத்த மாவட்டக் கூட்டங்களுக்குப் பெரும் உத்வேகத்தைத் தரும்.

கரூரில் ஏற்பட்ட கறையைத் துடைத்து, ஈரோட்டில் விஜய்யை வெற்றிக்கொடி நாட்ட வைப்பாரா செங்கோட்டையன்? நாளை மதியம் 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment