தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய அதிகார பகிர்வு குறித்த விவாதத்தில் சிக்கியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இடையே ஒரு ரகசிய ‘டீல்’ பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
அந்த தகவலின்படி, தவெக தரப்பிலிருந்து விசிகவிற்கு மாநில அமைச்சரவையில் இடமோ, துணை முதல்வர் பதவியோ வழங்கப்படாது என்று விஜய் கறாராக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. மாறாக, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் விசிகவைச் சிறப்பாக கவனித்து கொள்வதாகவும், இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளை தருவதாகவும் ஒரு மாற்று திட்டத்தை விஜய் முன்வைத்துள்ளதாக அந்த வதந்தி நீடிக்கிறது.
இந்த தகவல் வெளியானதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. “அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கையை தனது தேர்தல் முழக்கங்களில் ஒன்றாகவே வைத்திருந்த திருமாவளவன், அமைச்சரவையில் இடமே கிடைக்காத ஒரு சூழலில் வெறும் மேயர் பதவிகளுக்காக ஆதரவு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யின் இந்த திட்டம், மாநில அளவில் தனது ஆதிக்கத்தை சிதைக்காமல், அதே சமயம் கூட்டணி கட்சியை திருப்திப்படுத்த ஒரு தந்திரமான நகர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், அமைச்சரவையில் இடம் கிடைக்காதது விசிக தொண்டர்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் திருமாவளவனை விடாப்படியாக அமைச்சரவை பங்கை கோருமாறு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவும் இந்த வதந்தி உண்மையா அல்லது திட்டமிட்ட பொய் பிரச்சாரமா என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. ஒருபுறம், விஜய் தனது கொள்கை விளக்க கூட்டத்தில் கூறியது போல, எதற்கும் சமரசம் செய்யாமல் ஆட்சியை தனித்து நடத்த விரும்புகிறார். மறுபுறம், ஆட்சியமைக்க தேவையான அந்த மேஜிக் நம்பரை எட்ட விசிகவின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில், ‘உள்ளாட்சி தேர்தல் மேயர் பதவி’ என்பது ஒரு சமரச புள்ளியாக இருக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இருப்பினும், திருமாவளவன் போன்ற ஒரு மூத்த தலைவர் இத்தகைய ‘சின்ன டீலுக்கு’ ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம் என்ற கருத்தும் வலுவாக உள்ளது.
இந்த டீலுக்குத் திருமாவளவன் “ஓகே” சொல்லிவிட்டதாகவும், அதன்பிறகே அவர் நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்க தயாரானார் என்றும் சில தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இது உண்மையென்றால், தமிழக அரசியலில் இது ஒரு புதிய வகையான ‘அதிகாரப் பகிர்வு’ முறையாக உருவெடுக்கும்.