ஜெயலலிதாவை விட அரசியலில் மாஸ் காட்டியவர்கள் யாரும் இல்லை.. ஆனால் ஜெயலலிதாவை ஐந்தே வருடஙக்ளில் மக்கள் தூக்கி எறிந்தார்கள்.. விஜய் கற்று கொண்ட முதல் பாடம் இதுதான்.. மக்களுக்கு நன்மை செய்தால் எம்ஜிஆர் போல் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள்.. மக்களுக்கு எதிராக செய்தால் அது ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, விஜய்யாக இருந்தாலும் சரி தூக்கியெறிவார்கள்.. விஜய் இதை மனதில் வைத்து கொண்டால் நீண்ட காலம் ஆட்சி செய்யலாம்.. அவர் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, தன்னை சுற்றி இருப்பவர்களையும் அவர் கண்காணிக்க வேண்டும்…
தமிழக அரசியலில் வெற்றியைப் பெறுவது ஒரு விஷயம் என்றால், அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது அதைவிட பெரிய சவால். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் பயணத்திலிருந்து விஜய் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மனதில் அதிருப்தி உருவாகும் வகையில் செயல்பட்டால், எவ்வளவு பெரிய அரசியல் செல்வாக்கு இருந்தாலும் மக்கள் ஆட்சியை மாற்றத் தயங்கமாட்டார்கள் என்பதே அந்த பாடல் என கூறப்படுகிறது.
1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த தேர்தலில் திமுக கடுமையான தோல்வியை சந்தித்தது. திமுக சார்பில் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றதாக கூறப்படும் அளவுக்கு அந்த தேர்தல் முடிவு அமைந்தது. இதனால், ஜெயலலிதாவின் அரசியல் பயணம் அப்போது மிகப்பெரிய வெற்றியுடன் தொடங்கியது. அவரைச் சுற்றி உருவாக்கப்பட்ட அரசியல் பிம்பமும், மக்கள் மத்தியில் இருந்த ஆதரவும் அவரை நீண்ட காலம் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தலைவராக காட்டியது.
ஆனால் 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான விமர்சனங்கள் ஜெயலலிதா அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் விளைவாக 1996 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. ஜெயலலிதாவே இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஒரு முக்கியமான அரசியல் உண்மை வெளிப்பட்டது. எவ்வளவு பெரிய வெற்றியுடன் ஆட்சிக்கு வந்தாலும், மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் அடுத்த தேர்தலில் அவர்கள் கடுமையான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்பதே அது.
இந்த பாடம் விஜய் அரசியலிலும் முக்கியமானதாக இருக்கலாம் என்று தற்போது பேசப்படுகிறது. விஜய்க்கு இன்று இருக்கும் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு மிகப்பெரியது என்றாலும், அதுவே நிரந்தர பாதுகாப்பு என்று கருத முடியாது. ஆட்சியில் இருக்கும் போது மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் செயல்பட்டாலோ, அமைச்சர்கள் அல்லது கட்சி நிர்வாகிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அனுமதித்தாலோ, அதற்கான எதிர்விளைவுகளை மக்கள் தேர்தலில் காட்டக்கூடும். எனவே, ஆரம்பத்தில் கிடைத்திருக்கும் வரவேற்பை பாதுகாப்பதற்கு விஜய் ஆட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக லஞ்சம், ஊழல், முறைகேடு போன்ற விஷயங்களில் அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. எந்த அரசாலும் நூறு சதவீதமாக ஊழலை ஒழிப்பது நடைமுறையில் கடினமாக இருக்கலாம். ஆனால் ஊழலை கட்டுப்படுத்த அரசு உண்மையான நடவடிக்கை எடுக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் உருவானாலே, அது ஆட்சிக்கு மிகப்பெரிய நன்மதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளிலும் முதலமைச்சர் தொடர்ந்து கண்காணிப்பை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், “பத்து ஆண்டுகள் ஆட்சி செய்வோம், பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்வோம்” என்று அரசியல் ரீதியாக பேசுவதைவிட, அந்த நீண்ட கால ஆட்சிக்கான அடித்தளத்தை நிர்வாகத்தின் மூலம் உருவாக்குவதுதான் முக்கியம். எம்ஜிஆர் நீண்ட காலம் மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு அவரது ஆட்சியின் மீது உருவான தனிப்பட்ட நம்பிக்கையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜய்யும் மக்கள் நலன், நேர்மையான நிர்வாகம், ஊழல் கட்டுப்பாடு, அமைச்சர்களின் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் அவரது அரசியல் செல்வாக்கு மேலும் வலுப்பெறலாம். ஆனால் மக்கள் நம்பிக்கையை அலட்சியம் செய்தால், மிகப்பெரிய மாஸ் இருந்தாலும் அந்த மாஸை மக்கள் ஒரே தேர்தலில் மாற்றிவிட முடியும் என்பதே ஜெயலலிதாவின் அரசியல் வரலாறு சொல்லும் முக்கியமான பாடமாகும்.