யார் சார் கோமாளி? எங்கள் கூட்டத்தை கண்டுக்காமல் விட்டீர்களா? செய்தி தாள்கள், ஊடகங்கள், யூடியூப் சேனல்களில் தவெகவுக்கு எதிரான செய்திகளை வேண்டுமென்றே வரவழைத்தீர்களே அதுதான் கண்டுக்காமல் விட்ட லட்சணமா? விஜய்க்காகவே SOP கொண்டு வந்தீர்களே, அதுதான் கண்டுக்காமல் விட்ட லட்சணமா? விஜய் போலவே ரேம்ப் வாக் போனால் ஓட்டு விழுந்துரும்ன்னு காமெடி பண்ணுனீங்களே, அதுதான் கண்டுக்காமல் விட்ட லட்சணமா?
“தோல்வித் தலைவர்” மு.க. ஸ்டாலின் அவர்களே, மக்கள் மன்றத்தில் அடிவாங்கி ஆட்சியைப் பறிகொடுத்த பின்னரும், உங்களது அரசியல் ஆணவமும் அகந்தையும் குறையாமல் தவெகவை பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் விமர்சிப்பதைப் பார்க்கும்போது கோபத்திற்குப் பதிலாகச் சிரிப்புத்தான் வருகிறது. களத்தில் நின்ற தவெகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், திராவிடக் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என்றும் மேடைக்கு மேடை இறுமாப்போடு பேசிய நீங்கள், திரைமறைவில் செய்த சதி வேலைகளும் அச்சத்தின் வெளிப்பாடுகளும் நாடு அறிந்த பரகசியம். தவெகவின் வளர்ச்சியைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கிப்போய், எங்களை எதிர்கொள்ளத் துணிவின்றி நீங்கள் அரங்கேற்றிய நாடகங்கள் ஒவ்வொன்றும் உங்களின் அரசியல் பலவீனத்தையே உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.
தவெகவை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்று சாதிக்கும் நீங்கள்தான், நாள்தோறும் தொலைக்காட்சி ஊடகங்களின் தலைவர்களைத் தொலைபேசியில் அழைத்து எங்களது செய்திகளையும் மாநாடுகளையும் இருட்டடிப்பு செய்யுமாறு அழுத்தம் கொடுத்தீர்கள். செய்தித் தாள்களிலும் யூடியூப் தளங்களிலும் என்ன தலைப்பு வைக்க வேண்டும், எங்களை எப்படிச் சிறுமைப்படுத்திச் செய்திகள் வெளியிட வேண்டும் என்று அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டளையிட்டீர்கள். யூடியூப் சேனல்களின் Thumbnails கூட எங்களது தவெக தலைவரின் கம்பீரமான புகழையோ அல்லது மக்கள் ஆதரவையோ காட்டிவிடக் கூடாது என்று அடம் பிடித்து அலைந்தீர்கள். தவெகவை பொருட்படுத்தாதவர் என்றால், எதற்காக மாதந்தோறும் உங்களது பேனா மூலம் உளவுத்துறை அறிக்கைகளையும் ரகசியக் கருத்துக்கணிப்புகளையும் நடத்தி, தவெக வாக்கு வங்கியைக் கண்டு தினமும் பயந்து நடுங்கினீர்கள்?
தவெக என்ற இயக்கத்தின் தனித்துவமான மாநாட்டு உத்திகளையும், மக்கள் தொண்டர்களைக் கவரும் பாணியையும் பார்த்து அரண்டுபோன நீங்கள்தான், அதை அப்படியே நகலெடுக்கச் சொல்லி உங்களது SOP வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்தீர்கள். தவெக வெற்றித் தலைவர் மக்கள் மத்தியில் வலம் வந்த பாணியைப் பார்த்து, அதேபோல உடை அணிந்து திரியத் தொடங்கினீர்கள். வெற்றித் தலைவர் தவெக மாநாட்டில் ரேம்ப் அமைத்துத் தொண்டர்கள் மத்தியில் கம்பீரமாக நடந்து சென்றதைப் பார்த்து பொறாமைப்பட்டு, நீங்களும் அவசர அவசரமாக ரேம்ப் அமைத்து ‘பாம்பு வாக்’ போன கூத்துகளை இந்தத் தமிழக மக்கள் பார்த்துச் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எங்களது தலைவர் மீது அன்போடு தொண்டர்கள் துண்டு வீசி மகிழ்ந்ததைப் பார்த்து ஆசைப்பட்டு, உங்களது உடன்பிறப்புகளிடம் நீங்களும் துண்டால் அடி வாங்கியதுதான் நீங்கள் செய்த சாதனையா?
உங்களது இந்த போலியான நகல் அரசியலும், எங்களைப் பார்த்து அப்படியே காப்பி அடிக்கும் அடிமைத்தனமும் நீங்கள் எந்த அளவிற்கு பயத்தின் உச்சத்தில் இருந்தீர்கள் என்பதற்குச் சான்றாகும். சொந்தமாக எந்தவொரு புதிய சிந்தனையோ அல்லது இளைஞர்களைக் கவரும் திறனோ இல்லாமல், வெற்றித் தலைவரின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து அதை அப்படியே செய்து பார்க்க முயன்று தோற்றுப்போனது நீங்கள் தான். கொள்கை எதிரி என்றும், கோமாளிகள் என்றும் மேடையில் பந்தாவாகப் பேசிவிட்டு, பின்புறமாக அதே “கோமாளிகளின்” உத்திகளைப் பின்பற்றி அரசியல் செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்ட உங்களை விடவா இந்த அரசியல் களத்தில் ஒரு பெரிய கோமாளி இருக்க முடியும்?
உண்மையான எதிரி யார், மக்கள் மனநிலை என்ன என்பதை உணராமல், அதிகார மமதையில் மிதந்து கொண்டு இறுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்ட பின்னரும் இந்த மேடைப் பேச்சு உங்களுக்குத் தேவையா? அதிகாரத்தில் இருந்தபோது செய்த ஊழல்களையும், கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதையும் மறந்துவிட்டு, புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு தூய்மையான தலைவரையும், அவரை நம்பிய கோடிக்கணக்கான தொண்டர்களையும் “கோமாளி கூட்டம்” என்று விமர்சிப்பது உங்களது அரசியல் நாகரிகமின்மையையும், தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலையும் மட்டுமே காட்டுகிறது. உண்மையான மக்கள் சக்தியைப் புரிந்துகொள்ளாமல், கண்ணாடியில் தங்களது சொந்த பிம்பத்தைப் பார்த்தே கரடி என்று பயந்து நடுங்கும் ஒரு பலவீனமான தலைமையின் கீழ் திமுக சீரழிந்து கொண்டிருக்கிறது.
தவெகவை பார்த்து “கோமாளிக் கூட்டம்” என்று முத்திரை குத்த முயலும் “தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களுக்கு, புகழ்பெற்ற ஒரு சினிமா வசனத்தின் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். கடையில் இருக்கும் கண்ணாடி பொம்மையைப் பார்த்து, “அந்த கரடி பொம்மை என்ன விலை?” என்று அறியாமையில் கேட்ட கதைதான் உங்களது நிலைமை. “சார், அது கரடி பொம்மை இல்லை, உங்களது பிம்பத்தைக் காட்டும் கண்ணாடி சார்!” என்பதுதான் அதற்கான பதில். அதாவது, நீங்கள் எங்களைப் பார்த்து கோமாளிகள் என்று விரல் நீட்டும்போது, அது எங்களைக் குறிக்கவில்லை; அதிகாரத்தை இழந்து, மாற்று வழியின்றி எங்களை நகலெடுத்து அரசியல் நடத்தும் உங்களது சொந்தக் கோமாளித்தனமான பிம்பத்தையே அந்த அரசியல் கண்ணாடி உங்களுக்குத் திருப்பி காட்டுகிறது.