தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய தேர்தல் முடிவுகள் முந்தைய ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு, அறிவாலயத்தில் தற்போதைய நிலவரம் குறித்து ஒரு மாபெரும் ஆராச்சியும், தரவுகள் அடிப்படையிலான ஆய்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாம் ஏன் தோற்றோம், எங்கு தவறு நடந்தது, மக்களின் மனநிலை எப்போது நமக்கு எதிராக மாறியது என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் அக்கட்சியின் உயர்மட்ட குழுவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கள நிலவரத்தையும் மக்களின் உண்மையான கோபத்தையும் உணராமல், தோல்விக்கான காரணங்களை இன்னும் மேலோட்டமாக மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதுதான் திமுகவின் தற்போதைய பலவீனமாக பார்க்கப்படுகிறது.
திமுவின் தோல்வி குறித்து வெளியாகியுள்ள ஆரம்பக்கட்ட தரவுகளின்படி, மக்கள் மத்தியில் அக்கட்சி மீதிருந்த மிக முக்கிய அதிருப்தியே அவர்களின் “குடும்ப அரசியல்” பாணிதான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாம் மட்டும்தான் ஆள வேண்டும், நமக்கு அப்புறமும் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களோ அல்லது நம் வாரிசுகளோ மட்டும்தான் அதிகார பதவிகளுக்கு வர வேண்டும் என்று நினைக்கிற அந்தத் தற்பெருமை எண்ணம் இந்த முறை தமிழக மக்களுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை என்பதை வாக்குகள் நிரூபித்துள்ளன. இவற்றுடன் சேர்த்து, கடந்த சில ஆண்டுகளாக அரசு மீது அடுக்கப்பட்ட ஊழல் புகார்களும், ‘நாம்தான் எப்போதும் ஜெயிப்போம், நமக்கு போட்டியே இல்லை’ என்று திமுக தலைவர்களிடம் இருந்த அதீத சுயநம்பிக்கையும் அவர்களின் வீழ்ச்சிக்கு முதன்மை அஸ்திவாரமாக அமைந்துவிட்டன.
மேலும், இந்தத் தேர்தலில் திமுக செய்த மிகப்பெரிய அரசியல் தவறு என்னவென்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஓவராக அட்டாக் செய்ததுதான். விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது மாநாட்டையும் கண்டு பயந்துபோன ஆளுங்கட்சியினர், அரசு இயந்திரத்தையும் தங்களின் ஊடக பலத்தையும் பயன்படுத்தி அவரை தனிப்பட்ட முறையிலும் கொள்கை ரீதியாகவும் தீவிரமாக விமர்சித்து வந்தனர். ஆனால், இந்த தொடர் தாக்குதல்கள் விஜய்க்கு மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அனுதாப அலையையும், அசுரத்தனமான ‘ஃப்ரீ பப்ளிசிட்டி’யையும் உருவாக்கிவிட்டது. தங்களின் சொந்த கட்சியின் பலத்தையும், மக்கள் பணிகளையும் கவனிப்பதை விட்டுவிட்டு, தேர்தல் நேரத்தில் முழு நேரமும் விஜய்யையே கவனித்து கொண்டு, அவருக்கு எதிராக வியூகம் வகுத்ததே திமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.
ஆனால், இவ்வளவு தெளிவான கள நிலவரங்கள் கண்ணெதிரே இருந்தும், திமுகவின் தலைமை இன்னும் உண்மையான காரணங்களை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கட்சிக்குள் நடக்கும் ஆராய்ச்சிகளில், உளவுத்துறை நமக்குச் சரியான தகவல்களைத் தர தவறிவிட்டதா, மக்களின் வார்னிங் சிக்னல்களை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமா என்ற கோணத்திலேயே இன்னும் விவாதங்கள் நகர்கின்றன. இதுமட்டுமன்றி, தங்களோடு தசாப்தங்களாக பயணித்த கூட்டணி கட்சிகள் கடைசி நேரத்தில் தங்களை கவுத்துவிட்டனவா அல்லது மாவட்ட செயலாளர்கள் கொடுத்த ரவுண்ட் ரிப்போர்ட் தவறாக இருந்ததா என்று தேவையற்ற காரணங்களை தேடி இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்சியின் தலைமை எப்போது மக்களின் நாடி துடிப்பையும், அவர்களின் மனநிலை மாற்றத்தையும் புரிந்து கொள்ள மறுக்கிறதோ, அப்போதே அதன் வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது. அதிகார வர்க்கமும், ஆலோசகர்களும் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து தயாரித்து கொடுக்கும் வெற்று பேப்பர் ரிப்போர்ட்டுகளை மட்டுமே நம்பி கொண்டு, களத்தில் இருக்கும் எதார்த்த நிலையைத் திமுக இன்னும் உணராமல் இருப்பது ஆபத்தானது. குடும்ப அரசியல், ஊழல் பிம்பம் மற்றும் மாற்று சக்திகளை அநாகரிகமாக ஒடுக்க நினைக்கும் போக்கு ஆகியவற்றால் மக்கள் சலிப்படைந்துவிட்டனர் என்ற உண்மையை ஏற்கும் பக்குவம் ஆளுங்கட்சிக்கு வர வேண்டும். அதை விடுத்து, இன்னும் உளவுத்துறை மீதும், கூட்டணித் தலைவர்கள் மீதும் பழியை போட்டுக் கொண்டிருந்தால், அடுத்த தேர்தலில் இதைவிட மோசமான பாதாளத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்.
இறுதியாக, தமிழக மக்கள் எப்போதுமே தங்களின் உரிமைகளையும், தாராளமான ஜனநாயகத்தையும் விரும்பக் கூடியவர்கள். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைகளிலேயே அதிகாரம் சுழன்று கொண்டிருப்பதை அவர்கள் ஒருபோதும் நீண்ட காலத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. கத்துகிறவர்களும், அதிகாரத் திமிர் பிடித்தவர்களும் இங்குக் காலாவதியாகிவிட்டார்கள்; சத்தமில்லாமல் மக்களின் தேவைகளை உற்று நோக்கிய புதிய மாற்றத்தையே மக்கள் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளனர். திமுக இப்போதும் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தவறினால், காலத்தின் சக்கரம் அவர்களைத் தமிழக அரசியல் வரலாற்றின் பக்கங்களிலிருந்து வெகு தூரத்திற்குத் தள்ளி வைத்துவிடும் என்பது மட்டும் நிதர்சனம்.